சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமையன்று தெற்குத் தீவுகளில் இழுவைப் படகிலிருந்து வழிகாட்டிப் படகுக்குத் தாவிய படகோட்டி ஒருவர் கடலில் விழுந்து உயிர் இழந்துள்ளார். இவருடைய மரணம் இவ்வாண்டு ஐந்தாவது வேலையிட மரணமாகும்.
அந்த 29 வயது படகோட்டி அதிகாலை மூன்று மணிக்கு இழுவைப் படகிலிருந்து வழிகாட்டிப் படகுக்குத் தாவும் பொழுது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு கூறுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தான் விசாரித்து வருவதாகக் கூறிய அமைச்சு, சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம் தனது இடர் மதிப்பீடு, வேலையிட நடைமுறைகளை முழுமையாக ஆய்வு செய்யும் வகையில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார ஆய்வாளர் ஒருவரை நியமிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபற்றிக் கூறிய சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், இந்த விபத்து பற்றி சனிக்கிழமை அன்றே அதிகாலை சுமார் 2.50 மணிக்கு தனது கடல் துறை பாதுகாப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக விளக்கியது.
ஆபத்தான கடல் பகுதியில், அதிக கப்பல்கள் நெருக்கமாக இருக்கும் சூழலில் கப்பல்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு இட்டுச் செல்லும் பணியை வழிகாட்டிப் படகோட்டிகள் மேற்கொள்வது வழக்கம்.
இதற்கான நிபுணத்துவப் பயிற்சியை இவர்கள் பெற்றிருப்பர். விபத்து நடந்த சமயம் அந்த வழிகாட்டிப் படகோட்டி உயிர்காப்பு உடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
"சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், கரையோர காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகிய அமைப்புகள் உடனடியாக தனது அவசர, சுற்றுக்காவல் குழுவின் கலங்களை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி தேடுதல், மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது," என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
அத்துடன், வழிகாட்டிப் படகோட்டியைத் தேடும்படி முக்குளிப்பாளர்கள் பணிக்கப்பட்டதாகவும் இதற்கு உதவி புரியுமாறு அருகிலுள்ள கப்பல்களுக்கு கடல் பாதுகாப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டதாகவும் ஆணையம் விளக்கியது. பின்னர், காலை 11.30 மணிவாக்கில் படகோட்டியின் உடல் மீட்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
"படகுகளுக்கு இடையே நடமாடுவோர், சூழலுக்கு ஏற்றவாறு தகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு செயல்படும் பொழுது இடர்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம்," என்றும் மனிதவள அமைச்சு தெளிவுபடுத்தியது. அத்துடன், அவர்கள் தகுந்த உயிர்காப்பு உடையணிந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
மேலும், கடல் கலங்களில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் மூன்று பிடிமானங்கள் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு நினைவுறுத்தியது.
இந்தக் கடல் துறை சிப்பந்தியின் மரணம் தவிர இவ்வாண்டு மேலும் நான்கு வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.