துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட மிகச் சிரமமான மீட்புப் பணியில் சிங்கப்பூர் குழுவும் தனது பங்கையாற்றி நாடு திரும்புகிறது.
'ஆபரேஷன் லயன்ஹார்ட்' என்று அழைக்கப்படும் மீட்புப் பணியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 68 பேர் இடம்பெற்று இருந்தனர்.
இம்மாதம் 8ஆம் தேதி நகர்ப்புறத் தேடல் மற்றும் மீட்புச் சாதனங்களுடனும் உயிரைக் கண்டறியும் உபகரணங்களுடனும் இருபது அதிகாரிகளை குடிமைத் தற்காப்புப் படை அனுப்பி வைத்தது. இரண்டாவது குழு, 'K9' பிரிவைச் சேர்ந்த நான்கு மோப்ப நாய்கள், 48 அதிகாரிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து சிங்கப்பூர் அதிகாரிகளும் இன்று காலை சிங்கப்பூர் வருகின்றனர்.
அவர்களை சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், சிங்கப்பூருக்கான துருக்கிய தூதர் மெஹ்மட் புர்சின் கோனன்லி ஆகியோர் வரவேற்கவிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு துருக்கியின் தேசிய மருத்துவ மீட்புக் குழுவுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, கூடாரம், வெப்ப உடைகள் போன்றவற்றை வழங்குவதில் குழு முக்கிய பங்காற்றியதாக அது கூறியது.
உள்ளூர்வாசிகளுக்கு தங்களுடைய 'உசார்' உடைகளை நட்பு பாராட்டும் வகையில் அதிகாரிகள் அன்பளிப்பாக வழங்கினர்.
"துருக்கியிலிருந்து 'ஆபரேஷன் லயன்ஹார்ட்' குழு வெளியேறினாலும் துருக்கி மக்கள் எங்கள் இதயங்களிலும் மனதிலும் எப்போதும் இருப்பார்கள்," என்று எஸ்சிடிஎஃப் குறிப்பிட்டது.
சென்ற புதன்கிழமை அன்று தென்கிழக்கு நகரமான கரமன் மரஸ் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சிங்கப்பூர் குழுவை துருக்கிக்கான சிங்கப் பூர் தூதர் ஜோனதன் டோவ் சந்தித்துப் பேசினார்.
அந்த சமயத்தில்தான் எட்டு நாள் தேடல் மீட்புப் பணிக்குப் பிறகு சிங்கப்பூர் குழு நாடு திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தது.
இரண்டு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் சிக்கிக்கெண்ட ஒருவரின் ஈனக்குரல் கேட்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர் அவசர நிர்வாக அமைப்புக்கும் சிங்கப்பூர் குழு உதவிக்கரம் நீட்டியிருந்தது.
துருக்கியிலும் அண்டை நாடான சிரியாவிலும் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பல பேரைக் காணவில்லை.

