சிங்கப்பூரில் ஆடம்பர கார்களுக்கான வரி அதிகமாகும் என்று பிப்ரவரி 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதிக விலை உள்ள கார்களை வாங்குவோர் இம்மாதம் 22ஆம் தேதி முதல் மேலும் அதிக வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்நிலையில், மோட்டார் வியாபாரிகளுக்குக் கடந்த ஏலங்கள் மூலம் கிடைத்துள்ள பொதுப் பிரிவு வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழின் விலை, மறுவிற்பனைச் சந்தையில் $100,000க்கும் அதிகமாகக் கூடி இருக்கிறது.
பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.
வியாபாரிகள் சான்றிதழுக்கு $100,000க்கும் மேல் கேட்கிறார்கள் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
வாகன உரிமைச் சான்றிதழ்கள் மாற்றத்தக்கவை. அவற்றைப் பயன்படுத்தி ரோல்ஸ்-ராய்ஸ் பாந்தம் போன்ற விலை உயர்ந்த கார்களைப் பதிய முடியும்.
உரிமைச் சான்றிதழ் மாற்றக்கூடியது என்பதால் அதைப் பயன்படுத்தி பதிவோருக்கு வரியில் $434,431 மிச்சம் ஏற்படும்.
அது, புதிய கூடுதல் பதிவுக் கட்டண ஏற்பாட்டுக்குள் வராது என்பதே காரணம்.
இடம்பெறவிருக்கும் மாற்றங்கள், அடுத்த சுற்று வாகன உரிமைச் சான்றிதழ் ஏலத்தின்போது நடப்புக்கு வரும். பகிரங்கச் சந்தையில் $40,000க்கும் அதிக மதிப்புள்ள கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்.
ஆடம்பர கார்களுக்கான கூடுதல் பதிவுக் கட்டணம், பகிரங்க சந்தையில் $80,000க்கும் மேற்பட்ட அதன் மதிப்புக்கு 320 விழுக்காடாக இருக்கும். இப்போது இந்த அளவு 220% ஆக இருக்கிறது.
பொதுப் பிரிவு சான்றிதழ்கள் மூன்று மாதம் செல்லுபடியாகும்.
கடந்த டிசம்பர் மாதம் கிடைத்த சான்றிதழைக் கொண்டு கூடுதல் வரியை தவிர்த்துக்கொள்ளலாம்.
இந்தச் சான்றிதழ்களை மார்ச்சுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிப்ரவரி மாதத்தில் இடம்பெறும் முதல் ஏலத்தில் பெறப்படும் சான்றிதழ்கள் வரும் மே மாதம் வரை செல்லுபடியாகும்.
புதிய கார்களில் பெரும்பாலானவை சான்றிதழுடன் விற்கப்படுகின்றன. அவை ஒன்று அல்லது இரு வாரங்களில் பதிந்துகொள்ள தயாராக இருக்கும்.
அதே நேரத்தில், மிக அதிக விலையுள்ள ஆடம்பரகார்கள் தருவிப்பு ஆணை கிடைத்ததும்தான் தயாரிக்கப்படும். அவை சிங்கப்பூருக்கு வந்து சேர அதிக காலம் பிடிக்கும். ஆகையால், இத்தகைய கார்கள் பொதுவாக சான்றிதழ் இன்றியே விற்கப்படுகின்றன.
இத்தகைய காரை வாங்குவோர், அவை பதியப்படும்போது சான்றிதழ் கட்டணத்தையும் வியாபாரிக்குச் செலுத்த வேண்டி இருக்கும்.
பழைய பொதுப் பிரிவு சான்றிதழ்கள் தீரும் வரை அவற்றைத் தங்களால் முடிந்த அளவுக்கு விற்க வேண்டி இருக்கும் என்று கார் வியாபாரிகள் கூறுகிறார்கள்.
அதிக வரியும் விலையும் கூடும்போது கார் விற்பனை மெதுவடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

