செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b1b5ec2e-4889-4c47-ada1-a51a1381a3c3
-

நன்கொடைக்கான வரிக்கழிவு நீட்டிப்பு: அமைப்புகள் வரவேற்பு

நன்கொடைகளுக்கான வரிக்கழிவு, 2026ஆம் ஆண்டு முடிவு வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று 2023 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை, பொது அறப்பணி அமைப்புகள் (ஐபிசி) வரவேற்று இருக்கின்றன. வரிக்கழிவு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் வரும் ஆண்டுகளில் கொடை உணர்வு மேம்படும்.

அந்த முடிவு காரணமாக நன்கொடையாளர்கள், அறப்பணி அமைப்புகள், உதவி பெறுவோர் எல்லாருக்கும் தொடர்ந்து பலன் ஏற்படும் என்று எச்ஐஏ என்ற அமைப்பு கூறியது. வரவுசெலவுத் திட்டத்தில் வேறு ஓர் அறிவிப்பும் இடம்பெற்றது.

நிறுவனம்- ஐபிசி பங்காளித்துவத் திட்டம் பரந்த அளவிலான நிறுவன தொண்டூழியத் திட்டமாக மேம்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து வரிக்கழிவுக்குத் தகுதிபெறும் தொண்டூழிய நடவடிக்கைகள் விரிவடையும்.

அறப்பணி அமைப்புக் கட்டடங்களுக்கு வெளியே அல்லது மெய்நிகர் வழியில் இடம்பெறும் தொண்டூழிய செயல்களும் அவற்றில் உள்ளடங்கும்.

பசுமைமிகு பேஷோர் பேட்டை

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அமைய உள்ள 60 ஹெக்டர் பேஷோர் குடியிருப்பு வட்டாரத்தில் புதிய ஒரு மத்திய பூங்கா அமைந்து இருக்கும். அந்தப் பூங்கா, அந்தப் பேட்டை முழுவதும் பரவி இருக்கக்கூடிய பசுமை இடக் கட்டமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும்.

அந்தப் பசுமை இடங்கள் குடியிருப்பாளர்களுக்கு பொழுதுபோக்கு இடங்களாகத் திகழும். அதோடு தாவர, விலங்குகள் செழித்து வளரும் வாழ்விடங்களாகவும் அவை இருக்கும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

சிங்கப்பூரில் கூகல் ஆட்குறைப்பு

உலகப் புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகல், சிங்கப்பூரில் சுமார் 190 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. இங்கு செயல்படும் அந்த நிறுவனத்தில் ஏறக்குறைய 3,000 பேர் வேலை பார்க்கிறார்கள்.

அவர்களில் சுமார் 6 விழுக்காட்டினர் வேலை இழந்துவிட்டனர். இந்த விவரங்களை முன்னாள் ஊழியர்கள் கூறினர். கூகல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, கடந்த ஜனவரி மாதம் ஓர் அறிவிப்பு விடுத்தார்.

கூகல் உலகம் முழுவதும் 12,000 பேரை ஆட்குறைப்பு செய்யும் என்று அவர் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் ஆட்குறைப்பு இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர் என்பதை கூகல் தெரிவிக்கவில்லை.

தேக்கா பிளேஸ் ஃபேர்பிரைஸ் மூடல்

லிட்டில் இந்தியாவின் தேக்கா பிளேஸ் கடைத் தொகுதியில் 2020 மார்ச் முதல் செயல்பட்டு வந்த என்டியுசி ஃபேர்பிரைஸ் கடை இம்மாதம் 22ஆம் தேதி மூடப்படுகிறது.

இதை 'சிங்கப்பூர் எட்ரியம் சேல்' நிறுவனம், தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அந்த ஃபேர்பிரைஸ் கிளைக்கு வெளியே இது பற்றிய அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வெளியே உள்ள பிஓஎஸ்பி ஏடிஎம் இயந்திரமும் பிப்ரவரி 21 முதல் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ பாயோ இரவு சந்தை மூடல்

தோ பாயோவில் இரவு நேரத்தில் செயல்படும் காய்கறி மொத்த விற்பனை சந்தை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூடப்படும். அப்பகுதி மறு மேம்பாடு காணும்.

தோ பாயோ ஈஸ்ட்டில் இருந்து ஒரு தொழில் பேட்டைக்குச் செல்லும் 200 மீட்டர் பாதையில் அந்தச் சந்தை வாரம் ஆறு நாள்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படுகிறது.

அங்கு செயல்படும் காய்கறி கடைக்காரர்கள் பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் போன்ற இதர இடங்களுக்கு மாறிக்கொள்ளலாம். அது பற்றி காய்கறி கடைக்காரர்களுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

அந்தப் பகுதியில் வீவகவின் பல்வேறு பிடிஓ வீட்டு திட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன.