பொன்மணி உதயகுமார்
முதியோர், மின்னிலக்கமயமாக தயங்கும் காரணங்களை அறிந்து கொள்ளவும் அவர்கள் மின்னிலக்கமயத்தில் இணைய வழி காணவும் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ மக்கள், பங்காளி, தனியார் எனும் முத்தரப்பினருடன் உரையாடினார்.
முதியோரில் அதிகமானோர் இப்போது மின்னிலக்கப் பயன்பாடு களை விரும்புவதாகவும் பயன்படுத்துவதாகவும் கூறிய அறிவார்ந்த தேசத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான அவர், இதன் தொடர்பில் தொடர்பு, தகவல் அமைச்சு நடத்திய ஆய்வு முடிவுகளைத் தெரிவித்தார்.
மின்னிலக்கமயம் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்று தெரிவிக்கும் முதியோர் அதிகம் என்றாலும் மின்னிலக்கக் கட்டண முறைகளைப் பயன்படுத்த தெரியாதவர்கள் கணிசமாக உள்ளதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் 99% வீடுகளில் இணைய வசதியும் 92% வீடுகளில் கணினி வசதியும் இருந்தாலும் சிலரிடையே மின்னிலக்கப் பயன்பாட்டுத் திறமை குறைவாகவே இருக்கலாம் என்பதால் இதை மாற்ற தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பல முயற்சிகளில் தொடர்பு, தகவல் அமைச்சு ஈடுபட்டு வருகிறது என்றாரவர்.
நீ சூன் ஈஸ்ட் வட்டார மூத்த குடிமக்கள் மையத்தில் முதியோர் மின்னிலக்கமய சாலைக்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு மின்னிலக்கக் கட்டண முறைகளைப் பயன்படுத்த கற்றனர். மூத்த மின்னிலக்கத் தூதர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதியோருக்கு உதவினர்.
முதியோர் மின்னிலக்கமய மாக அரசாங்கம் பல வழிகளில் உதவுகிறது என்றாலும் இந்தியர் கள் அவற்றில் கலந்துகொள்வது குறைவாகவே உள்ளதாக மூத்தோர் நல்வாழ்வுத் தகவல்தொடர்பு தூதர் க. செல்வகிருஸ்ணன், 70, கூறினார்.
"அடுத்த 10 ஆண்டுகளில் மின்னிலக்க மாற்றங்கள் பெரியளவில் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த மாற்றங்களுக்கேற்ப முதியோர் தொடர்ந்து பலவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
மின்னிலக்க மாற்றங்களை ஏற்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அம்மாற்றத்தில் அனைவரையும் சேர்த்துக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று திருவாட்டி டியோ கூறினார்
முதியோருக்குத் தகுந்தவாறு செயலிகளை வடிவமைப்பது, அவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொடுப்பது போன்ற முயற்சிகளில் சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

