சிங்கப்பூரில் முன்பைவிட அதிகமான மாதர்கள் தங்கள் பிள்ளை களுக்குத் தாய்ப்பால் கொடுக் கிறார்கள். ஆகையால் அதற்கு வேலை இடங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது.
தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர் முன்பை விட அதிகம் என கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவ மனை உள்ளிட்ட பிரசவ மருத்துவமனைகளும் கூறுகின்றன.
அதோடு, தாய்மார்கள் முன்பைவிட அதிக காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியவந்து உள்ளது. 2018ஆம் ஆண்டில் மாதர், தங்கள் பிள்ளைகளுக்குச் சராசரியாக 8.1 மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தார்கள். அந்த அளவு 2022ல் 11.8 மாதம் வரை என்று ஆகி இருக்கிறது.
இந்த வாரியம், 2021/2022ல் தேசிய அளவில் ஆய்வு நடத்தியது. 97% அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதாக தெரிந்தது.
ஆறுமாதக் குழந்தைகளைப் பார்க்கையில், 10ல் 4 பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. இந்த அளவு 2011ஆம் ஆண்டின் ஆய்வில் 10க்கு 1 ஆக இருந்தது.
பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் சிறந்தது, அது அவசியமான ஒன்று என்று வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும் வேலை பார்க்கும் அன்னையர்களில் பலரும் வேலை இடத்தில் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் பல சங்கடங்களை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த வாரியம், வேலை இடத்தில் அன்னையர் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க தேவையான வசதிகளை முத லாளிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தியது.

