எஸ்பிஎச் மீடியா, ஜப்பானிய நிதித் துறை செய்தி நிறுவனமான நிக்கெய் இரண்டும் தங்களுடைய செய்தி அறைகளை மின்னிலக்கமயமாக உருமாற்றுவதில் தாங்கள் பெற்றுள்ள அனுபவங்களையும் நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் சேர்ந்து செயல்படவிருக்கின்றன.
அதோடு, சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் உள்ள வாசகர்களுக்கு இன்னும் சிறந்த சேவையாற்றும் வகையில் புதிய மின்னிலக்கப் புதினங்களை உரு வாக்கவும் இரண்டும் முயலும்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரான கோ பூன் வான் வியாழக்கிழமை நிக்கெய் தலைவர் நோடோஷி ஒகாடாவை சந்தித்தார்.
இருவரும் தங்களுடைய அமைப்புகளுக்கு இடையில் இப்போதைய ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்தனர்.
உத்திபூர்வ முறையில் மேலும் ஒத்துழைப்பது பற்றி அவர்கள் விவாதித்ததாக எஸ்பிஎச் மீடியா பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, எஸ்பிஎச் மீடியாவுக்கும் 'ஹான்ட்ஷேக்ஸ் பை டிசி ஃபிரான்டியர்ஸ்' என்ற கணினித் தகவல் பகுப்பாய்வு நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு திட்டம் இடம்பெறும்.
இந்தப் பங்காளித்துவ ஒத்துழைப்பின் முதல் கட்டமாக ஹான்ட்ஷேக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் எஸ்பிஎச் மீடியாவின் மின்னிலக்கச் செய்திகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

