கோப்பிதியாம் உணவுக்கடை குழுமம், அதிகமானோர் வந்து செல்லும் தனது 15 கடைகளில், 80க்கும் மேற்பட்ட மின்னிலக்க ஆர்வலர்களை மார்ச் முதல் ஜூன் வரைப்பட்ட காலத்தில் பணியில் அமர்த்தி, வாடிக்கையாளர்கள் ரொக்க அட்டைக்குப் பதிலாக செயலி முறைக்கு மாறிக்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த ஆர்வலர்கள், ஃபேர்பிரைஸ் ஊழியர்களாக அல்லது தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள். அவர்கள் தீவு முழுவதிலும் செயல்படும் கோப்பிதியாம் கடைகளில் பிரித்துவிடப்படுவார்கள்.
கடைக்கு வருவோரை, குறிப்பாக முதியோரை அணுகி அவர்கள் கைப்பேசியில் ஃபேர்பிரைஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள அந்த ஆர்வலர்கள் உதவுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செயலியைப் பயன்படுத்தி அனுகூலப் புள்ளிகளைப் (Linkpoints) பெறுவது, அவற்றைச் செலவிட்டு கடையில் காப்பி, உணவு போன்றவற்றை வாங்குவது எப்படி என்பதைப் பிறகு அவர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.
ஃபேர்பிரைஸ் குழுமத்தில் நான்கு சமூக நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
ஃபேர்பிரைஸ், ஃபுட்ஃபேர், கோப்பிதியாம், என்டியுசி லிங்க் ஆகியவை அந்த நிறுவனங்கள். இப்போது கோப்பிதியாம் அட்டை நடப்பில் இருக்கிறது.
அந்த அட்டையில் பணத்தை நிரப்பிக் கொண்டு இந்தக் குழுமத்தின் கடைகளில் ரொக்கமாகப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக அந்த அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். அட்டையைப் பயன்படுத்தும்போது 10% விலைக்கழிவு கிடைக்கும்.
கோப்பிதியாம் அட்டை வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அறிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு அந்த அட்டையில் பணம் ஏற்ற முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது.
என்றாலும் அந்த அட்டை ஜூன் வரை செல்லும். செயலிக்கு மாறுவோர் அட்டையில் எஞ்சி இருக்கும் தொகையைச் செயலிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அட்டைக்குப் பதிலாக ஃபேர்பிரைஸ் செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதைக் கடன் அல்லது பற்று அட்டையுடன் இணைத்து செயலியில் பணம் ஏற்றலாம்.
பிறகு செயலியைப் பயன்படுத்தி ஃபேர்பிரைஸ் குழுமத்தின் கடைகளில் வாங்கும் காப்பி, உணவு போன்றவற்றுக்குப் பணத்தைச் செலுத்தி அதே 10% விலைக் கழிவைப் பெறலாம்.
அட்டையில் எஞ்சி இருக்கும் தொகை யைத் திரும்பப் பெற யாராவது விரும்பினால், அவர்கள் மின்னிலக்க ஆர்வலர்கள் பணியில் உள்ள 15 கடைகளில் செயல்படும் கூடங்களை அணுகலாம். அங்குள்ள சாதனங்களில் அவ்வாறு செய்துகொள்ளலாம்.
கடைத்தொகுதிகள், அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்புப் பேட்டைகளில் மொத்தம் 72 கடைகளை கோப்பிதியாம் நடத்துகிறது.
அவற்றின் நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் சாப்பிட வரும் முதியோரை அணுகி அவர்களுக்கு விளக்கம் அளித்து செயலிக்கு மாறுவதால் ஏற்படக்கூடிய வசதிகளை, அனுகூலங்களை எடுத்துக் கூறி புரியவைக்கிறார்கள்.
ஃபேர்பிரைஸ் செயலிக்கு மாறுவதற்கு மேலும் உதவியாக கோப்பிதியாம் கடை களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கடைகளில் காணொளிகளும் இடம்பெறுகின்றன.

