ஆயுதப்படை சுகாதார மையம் கிராஞ்சி முகாம் IIIல் தொடக்கம்

ஆயுதப்படை சுகாதார மையம் கிராஞ்சி முகாம் IIIல் தொடக்கம்

2 mins read
c1bbba12-a4fd-4c84-a63f-61dbc0c3c752
-

வடமேற்கு வட்டார முகாம்களுக்கான மத்திய சுகாதார சேவை நிலையமாக செயல்படும்

சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த சேவை வீரர்களுக்கான ஆறு சுகாதார பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் கிராஞ்சி முகாம் IIIல் நேற்று அதி காரபூர்வமாகத் தொடங்கியது.

'கிராஞ்சி வட்டார சுகாதார மையம்' என்று குறிப்பிடப்படும் அந்த மையம் 2022 செப்டம்பர் முதல் செயல்பட்டு வருகிறது.

அதில் இரண்டு மாடி மருத்துவ வசதிகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட மருத்துவ, பல் மருத்துவ சிகிச்சை வசதிகள், சிறப்பு வல்லுநர்கள் சேவை, நோய்களை கண்டறிவதற்கான மேம்பட்ட ஆற்றலுடன் கூடிய வசதிகள் ஆகியவை அங்கு உள்ளன.

வடமேற்கு வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் ஆயுதப் படைமுகாம் வீரர்களுக்குச் சுகாதாரச் சேவைகளை வழங்கும் மைய அமைப்பாக அது சேவையாற்றும்.

அதோடு, கிராஞ்சி I, II, III, முகாம்கள், மண்டாய் ஹில் முகாம், ஆயுதப் படை தடுப்புக்காவல் நிலையம், ஸ்டாக்மண்ட் முகாம் ஆகியவற்றுக்கும் அந்த மையம் ஆதரவு அளிக்கும்.

ஆறு வட்டார சுகாதார மையங்கள் சிங்கப்பூர் முழுவதும் ஏற்படுத்தப்படும். அவை மேம்படுத்தப்பட்ட பல்வேறு சுகாதாரச் சேவைகளை வழங்கும்.

சுகாதாரச் சேவைகளை ஒரே இடத்தின்கீழ் ஒருமுகப்படுத்துவதன் மூலம் வளங்களைக் கூடுமானவரை செம்மையாகப் பயன்படுத்த முடியும் என்று செய்திஅறிக்கை ஒன்றில் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

வீரர்களைப் பொறுத்தவரை பலதரப்பட்ட சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கான வழி வகைகள் அதிகமாக இருக்கும். வீரர்கள் பல முறை போய்வர வேண்டிய தேவை இராது.

மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தேவையான கால நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறையும் மேம்படும். நீண்டகாலப் போக்கில் பராமரிப்புத் தரத்தையும் அனுபவத்தையும் அது மேம்படுத்தும் என்று பேச்சாளர் தெரிவித்தார்.

கிராஞ்சி மையம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், சிங்கப்பூர் ஆயுதப் படையின் சுகாதாரமும் உடலுறுதியும் மிக மிக முக்கியமான ஒன்று என்று வலியுறுத்திக் கூறினார்.