சைக்கிள், மின்சைக்கிளுக்கு நீள, அகல வரம்பு; ஆலோசனைக் குழு பரிந்துரை

சைக்கிள், மின்சைக்கிளுக்கு நீள, அகல வரம்பு; ஆலோசனைக் குழு பரிந்துரை

2 mins read
5000c009-a5ae-4e9d-8cb8-e6859204083f
-

சிங்கப்பூர் சாலைகளில் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படும் சைக்கிள், மின்சைக்கிள், சரக்கு ஏற்றிச் செல்லும் சைக்கிள் உள்ளிட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நீள, அகல வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்து இருக்கிறது.

'தனிநபர் நடமாட்ட சாதன ஆலோசனைக் குழு' தன்னுடைய பரிந்துரை அறிக்கையை நேற்று போக்கவரத்து அமைச்சிடம் தாக்கல் செய்தது.

அளவுக்கு அதிகமாக அகண்டு, நீண்டு இருக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், சாலைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு இடையூறாக அல்லது அவை மெதுவாகச் செல்லக்கூடியவையாக இருக்கலாம்.

அவற்றை முந்திச் செல்வதும் சிரமம் என்று அறிக்கையில் 16 பேரைக் கொண்ட அந்தக் குழு தெரிவித்து இருக்கிறது.

அத்தகைய வாகனங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை ஆராய்ந்த குழு, அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆலோசனையை அரசாங்கத்திற்கு வழங்கி இருக்கிறது.

சிங்கப்பூர் சாலைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் ஒரு குறிப்பிட்ட நீள, அகல வரம்புக்குட்பட்டு இருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.

வழக்கத்திற்கு மாறான நீள அகலங்களுடன கூடிய புதுவகை வாகனங்களை சிங்கப்பூர் சாலைகளில் காண முடிகிறது என்றாலும் அவை இன்னமும் பரந்த அளவில் அதிகமாகவில்லை.

இத்தகைய வாகனங்கள் ஐரோப்பாவிலும் வடஅமெரிக்கா நகர்களிலும் புதிய பாணியாக தலையெடுக்கின்றன.

இதைக் கருத்தில்கொண்டு இங்கு அத்தகைய வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தி குழு தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

நடைபாதைகளிலும் சைக்கிளோட்ட வழிகளிலும் இப்போது பயன்படுத்தப்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் அனைத்தும் 70 செ.மீ.க்கு அதிக அகலமாக 20 கிலோவுக்கும் அதிக எடையுடன் இருக்கக் கூடாது.

சந்தையில் காணப்படும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மூன்று சக்கர சைக்கிள்கள், சாய்வு இருக்கை சைக்கிள்களில் பெரும்பாலானவை 70 செ.மீ. அளவைத் தாண்டியவையாக இருக்கின்றன. அத்தகைய வாகனங்களின் எடை 20 கிலோவுக்கும் அதிகமாக இருக்கிறது.

ஆகையால், அவற்றை நடைபாதைகளில் பயன்படுத்த முடியாது என்று குழு கூறுகிறது.

பொதுப் பாதைகளில் அனுமதிக்கப்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு உரிய உயர வரம்பை மறுபரிசீலனை செய்வது பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும்;

மோட்டார் பொருத்தப்பட்ட சரக்கு சைக்கிள்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், சாய்வு இருக்கை சைக்கிள்கள் ஆகியவற்றுக்குப் பாதைகளிலும் சாலைகளிலும் தொடர்ந்து தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் குழு ஆலோசனை கூறி இருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தர அளவீடுகள் கிடைக்கும் போது பரிந்துரைகளை மீண்டும் மறுபரிசீலனை செய்ய முடியும் என்றும் குழு கூறியுள்ளது.