தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தை அடுத்து 26 வயது மாது ஒருவர் மாண்டுவிட்டார்.
அந்த விபத்து, ஒரு குட்டி பேருந்து, இரண்டு மோட்டார்சைக்கிள்கள் சம்பந்தப்பட்டது என்றும் அது நேற்றுக் காலை 8 மணிக்கு நிகழ்ந்ததாகவும் காவல்துறை கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அதன் தொடர்பில் 54 வயது ஆடவர் கைதாகி இருக்கிறார். கைதானவர் குட்டி பேருந்தை ஓட்டி வந்தவர். விபத்தில் சிக்கிய ஒரு மோட்டார்சைச்கிளை ஓட்டி வந்த 31 வயது ஆடவர் புலன்விசாரணையில் உதவுகிறார்.
மற்றொரு மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த 29 வயது ஆடவர் விபத்தில் காயம் அடைந்து சுயநினைவுடன் இருந்தார். பின்னிருக்கையில் பயணம் செய்த மாது சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் மாண்டுவிட்டார்.
அந்த ஆடவரும் மாதும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. காவல்துறை புலன்விசாரணை தொடர்கிறது.

