சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த ஆண்டு அதிகப்படியாக கைப்பற்றிய பொருள்களில், பாலியல் நடவடிக்கையை மேம்படுத்த உதவும் பொருள்களும் அடங்கும்.
கடந்த ஆண்டு முழுவதும் கைப்பற்றப்பட்ட 737,000 பொருள்களில் அவை 39 விழுக்காடு பங்கு வகித்தன. இணைய விற்பனைத் தளங்களில் இருந்து நீக்கப்பட்ட பொருள் பட்டியலிலும் அவை 55 விழுக்காடு பங்கு வகித்தன என்று ஆணையம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருள்களின் மதிப்பு $640,000. 2021 பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பைவிட இது $200,000 அதிகம். சட்டவிரோத விநியோகிப்பாளர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை அதிகரிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று ஆணையம் கூறியது.
ஆக அதிகம் கைப்பற்றப்பட்ட பொருள் கோடின் இருமல் மருந்து. கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட பொருள்களில் இது 46 விழுக்காடு பங்கு வகித்தது.
சட்டவிரோத சுகாதாரப் பொருள்களை விநியோகித்து, விற்றதற்காக கடந்த ஆண்டு 15 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்களில் ஒருவரான 59 வயது ஆடவருக்கு ஆறுமாத, இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோடின், வலி நீக்கும் மருந்துகளை அவர் சட்டவிரோதமாக விற்றார்.
ஒவ்வாமை, 'எக்ஸிமா' சருமப் பிரச்சினையைக் குணப்படுத்தும் என விளம்பரப்படுத்தப்பட்ட சருமத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இணைய விற்பனைத் தளங்களில் இருந்து நீக்கப்பட்ட பொருள் பட்டியலில் 43 விழுக்காடு பங்கு வகித்தன. வலி நிவாரணப் பொருள்கள், உடல் எடையைக் குறைக்கும் பொருள்கள் தலா 1 விழுக்காடு பங்கு வகித்தன.
இணைய விற்பனைத் தளங்களில் இருந்து மொத்தம் 477 சட்டவிரோத பொருள் பட்டியல்களை ஆணையம் நீக்கியது. கடந்த ஆண்டு விற்பனையாளர்களிடம் ஆணையம் 192 முறை எச்சரிக்கை விடுத்தது. 2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இவ்விரு எண்ணிக்கையும் ஏறக்குறைய பாதி அளவாகும்.
மருத்துவப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்ட 12 பொருள்கள் குறித்து கடந்த ஆண்டு ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
அத்தகைய பொருள்களை உட்கொண்ட அல்லது பயன்படுத்திய இளம் பிள்ளைகள் மூவர் உட்பட 10 பேர் கடுமையான பக்கவிளைவுகளால் அவதியுற்றனர்.
சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் பொதுச் சுகாதாரத்திற்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால் மக்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியது.

