தெற்கு காட்டுப் பகுதிகளைத் தவிர்த்து, சிங்கப்பூர் காட்டுப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் அவை தெற்கு காட்டுப் பகுதிகளிலும் அதிகரிக்கக்கூடும் என்று அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
'கன்சர்வேஷன் சைன்ஸ் அண்ட் பிராக்டிஸ்' எனும் சஞ்சிகையில் பிப்ரவரி 16ஆம் தேதி அந்த ஆய்வறிக்கை பிரசுரிக்கப்பட்டது.
அந்த ஆய்வின்படி, இருபது ஆண்டுகளுக்குள் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
உண்ண உணவு அதிகமாக இருப்பது, காட்டுப்பன்றிகளைக் கொன்று, தின்னும் உயிரினங்கள் குறைந்திருப்பது, சிங்கப்பூரில் வனவிலங்குகளை வேடையாடுவதற்கு முழுத் தடை நடப்பில் இருந்து வருவது ஆகியவை காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்களாக உள்ளன.
மனிதர்களும் வனவிலங்குகளும் ஒன்றாக வாழ்வதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, காட்டுப்பன்றிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உணவு வழங்குவதைத் தவிர்க்குமாறு தேசிய பூங்காக் கழகம் அறிவுறுத்துகிறது. இல்லாவிட்டால், உணவுக்காக காட்டுப்பன்றிகள் மனிதர்களை நாடி வரும்.
அக்கம்பக்க குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைவதைத் தடுக்க அரசாங்க அமைப்புகள், சொத்து மேம்பாட்டாளர்களுடன் சேர்ந்து தேசிய பூங்காக் கழகம் பணியாற்றி வருவதாக கழகத்தின் வனவிலங்கு நிர்வாக குழும இயக்குநர் டாக்டர் ஏட்ரியன் லூ கூறினார்.