செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2032f00a-f1b3-41c4-93be-47f9a06ecb63
-
multi-img1 of 2

மிளகாய்த் துருவலை அடுக்குகளில் இருந்து அகற்றியது ஃபேர்பிரைஸ்

'மோரிசன்' மிளகாய்த் துருவல் இருந்த புட்டியில் வெள்ளைப் புழுக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மிளகாய்த் துருவலை ஃபேர்பிரைஸ் அதன் பேரங்காடி அடுக்குகளிலிருந்து அகற்றியுள்ளது.

பீட்சா செய்துகொண்டிருந்தபோது ஸ்டோம்ப் பயனரும் அவருடைய குடும்பத்தாரும் அந்தப் புழுக்களைக் கண்டறிந்தனர்.

ஆலன் என்று அழைக்கப்படும் அந்தப் பயனர், "வீட்டில் செய்த பீட்சா மீது மிளகாய்த் துருவலை நாங்கள் கொட்டியபோது, தட்டையில் நிறைய புழுக்கள் ஓடுவதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். என்னுடைய குடும்பத்தார் சிலர், அந்தப் புழுக்களைக் கவனிக்காமல் பீட்சாவைச் சாப்பிட்டுவிட்டனர்," என்று ஸ்டோம்ப் இணையத்தளத்திடம் கூறினார்.

மரின் பரேட் சென்ட்ரலின் ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட் பேரங்காடியிலிருந்து ஜனவரி 27ஆம் தேதி தாம் அந்த மிளகாய்த் துருவலை வாங்கியதாக அவர் சொன்னார்.

புட்டியிலிருந்து மிளகாய்த் துருவலைக் கொட்டிய பிறகு, புழுக்கள் ஓடுவதைக் காட்டும் புகைப்படங்களை ஆலன் பகிர்ந்தார்.

இது குறித்து ஃபேர்பிரைஸ் பேச்சாளர் கூறுகையில், "வாடிக்கையாளரின் சங்கடமான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு அவருக்கு நன்றி கூறுகிறோம். உணவுப் பொருள்களின் தரம் என வரும்போது ஃபேர்பிரைஸ் மிகுந்த கவனம் கொள்கிறது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம்.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை அடுக்குகளிலிருந்து நாங்கள் அகற்றியுள்ளோம். மேலும், வாடிக்கையாளரிடம் முழுப் பணத்தைத் திருப்பித்தர ஏற்பாடு செய்துள்ளோம்," என்று விவரித்தார்.

$61,000 மதிப்பிலான கைப்பேசிகளைத் திருடியவருக்கு எட்டு மாதச் சிறை

சாம்சுங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த டான் ஜியா வெய் என்னும் 31 வயது ஆடவர், கடன் பிரச்சினைகள் காரணமாக அலுவலகத்தில் இருந்து $61,000 மதிப்பிலான கைப்பேசிகளைத் திருடினார்.

ஆடவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டான் சட்டவிரோதமாக கடன் வாங்கி, அதைத் திரும்ப அடைக்கமுடியாமல் போனதால் அலுவலகத்தில் இருந்து கைத்தொலைபேசிகளை திருடினார். திருடிய கைப்பேசிகளை அவர் மறுவிற்பனை செய்தார்.

டான், 2021 டிசம்பர் மாதம் முதல் சாம்சுங் நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் அவர் மாதம் $5,300 ஊதியமாகப் பெற்றதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

2022 ஜூலை மாதம் டான் கிட்டத்தட்ட

20 கைப்பேசிகளைத் திருடி அவற்றை மறுவிற்பனை செய்தார். அதன்பின்னர் அவர் அடிக்கடி திருட்டில் ஈடுபட்டார்.

2022 ஆகஸ்ட் 10ஆம் தேதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட பொருள் சரிபார்ப்பு நடவடிக்கையின்போது 289 கைப்பேசிகள் காணாமல்போனதாக கணிக்கப்பட்டது.

2022 நவம்பர் 8ஆம் தேதி டான் கைது செய்யப்பட்டார். சாம்சுங் நிறுவனத்திடம் அவர் $61,200ஐ திரும்பக் கொடுத்துவிட்டார்.