நிர்வாக உதவியாளர், வாகன ஓட்டுநர்களுக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறை அமல்
சிங்கப்பூரில் முழுநேரம் வேலை பார்க்கும் வாகன ஓட்டுநர்கள், நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட ஏறக்குறைய 40,000 பேருக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் சம்பள உயர்வு கிடைக்கும்.
குடிமக்களும் நிரந்தரவாசி களுமான அந்த ஊழியர்களுக்குத் 'தொழில் சார்ந்த படிப்படியான சம்பள உயர்வு முறை' (ஒபிடபிள்யூ) மூலம் இந்த நன்மை கிடைக்கவிருக்கிறது.
நிர்வாக உதவியாளர்களின் சம்பளம் குறைந்தபட்சம் $1,500 ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதுபோல வாகன ஓட்டுநர்கள் குறைந்தது $1,750 மொத்த சம்பளத்தை எதிர்பார்க்க முடியும்.
ஒபிடபிள்யூ முறையை, தேசிய சம்பள மன்றம் உருவாக்கி இருக்கிறது. அந்த முறை, முழுநேரமாக, பகுதிநேரமாக வேலை பார்க்கின்ற சுமார் 195,000 நிர்வாக உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு மார்ச் 1 முதல் நடப்புக்கு வருகிறது.
இந்த ஊழியர்களுக்கு அவர்களின் பயிற்சி, உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கு ஏற்ப சம்பளம் படிப்படியாக உயரும்.
இத்தகைய ஊழியர்கள் வேலை பார்க்கும் துறைகள் எந்த பிரிவில் இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் வேலை அடிப்படையில் படிப்படியாக உயரும் சம்பள முறை முதன்முதலாக இதன்மூலம் நடப்புக்கு வருகிறது.
இந்தச் சம்பள முறை ஏற்கெனவே பல துறைகளில் நடப்பில் உள்ளது.
நிர்வாக உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் வேலை பல துறைகளையும் தழுவியதாக இருக்கிறது.
இருந்தாலும்கூட இத்தகைய வேலைகளைப் பார்ப்பதற்குத் தேவைப்படக்கூடிய தேர்ச்சிகள், படிப்படியாக உயரும் சம்பள முறைக்குத் தகுதிபெறும் அளவுக்கு ஒத்து இருக்கின்றன என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.
அமைச்சர், நேற்று போக் செங் என்ற தளவாடப் போக்குவரத்து நிறுவனத்துக்கு வருகையளித்தார். அந்த நிறுவனத்தில் 260 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 83 பேர் ஒபிடபிள்யூ முறையின்கீழ் பயனடைந்து இருக்கிறார்கள்.
முதலாளிகள் மார்ச் 1 முதல் ஒபிடபிள்யூ முறையின் பயிற்சி நிபந்தனைகளையும் சம்பள நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இதற்குத் தோதாக அவர்கள் இப்போதைய வேலை அனுமதிகளைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது புதிய வேலை அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இருந்தாலும், முதலாளிகளுக்கு அடுத்த மாதம் முதல் வரும் ஆகஸ்ட் வரை மனிதவள அமைச்சு காலஅவகாசம் கொடுக்கும்.
அதற்குள்ளாக அவர்கள் சம்பள நிபந்தனைகளை நிறைவேற்றிவிட வேண்டும்.
இந்தக் காலஅவகாசம் குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.
தேசிய சம்பள மன்றம் 2024 மார்ச்சுக்கும் அதற்கு அப்பாற்பட்ட காலத்திற்குமான ஒபிடபிள்யூ சம்பள நிபந்தனைகள் பற்றி இந்த ஆண்டு மறுபரிசீலனை செய்யும்.