சீனாவுக்கு அமைச்சர் விவியன் வலியுறுத்து: தொடர்புகள் வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும்

சீனாவுக்கு அமைச்சர் விவியன் வலியுறுத்து: தொடர்புகள் வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும்

2 mins read
9d35858c-7561-4229-abb6-99ecf9f74cf2
-

சிங்கப்பூரும் சீனாவும் கொரோனா பிடியில் இருந்து விடுபட்டுள்ளன.

ஆகையால், இரு நாடுகளுக்கும் இடையில் வாழ்வும் தொழில்களும் பரஸ்பர பரிமாற்றங்களும் முன்பு இருந்த அளவுக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும்.

இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்கிடம் வலியுறுத்தினார்.

அமெரிக்காவுக்கான சீனாவின் தூதராகப் பணியாற்றி வந்த திரு சின், கடந்த டிசம்பரில் சீன வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் முதன்முதலாகச் சந்தித்தனர்.

கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலைக்கு விமானங்களும் இதர தொடர்புகளும் திரும்ப வேண்டும் என்பதே சிங்கப்பூரின் விருப்பம் என்பதை டாக்டர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் முன்பு வாரம் 400 விமானச் சேவைகள் நடந்தன. இப்போது வெறும் 56 சேவைகளே நடக்கின்றன என்று திரு சின்னிடம் திங்கட்கிழமை டாக்டர் விவியன் தெரிவித்தார்.

சீனா கொவிட்-19 தொடர்பில் கொள்கையைத் தளர்த்தியதற்குப் பிறகு முதன்முதலாக டாக்டர் பாலகிருஷ்ணன் சீனப் பயணம் மேற்கொண்டார்.

சிங்கப்பூர் அமைச்சர், சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் யின் லியை முன்னதாக சந்தித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பொது உறவுப் பிரிவுத் தலைவர் லியூ ஜியான்சோ சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்து அளித்து சிறப்பித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் கலந்துறவாடல் அடிக்கடி நிகழ அருமையான வாய்ப்புகளை சிங்கப்பூர் அமைச்சரின் வருகை வழங்குகிறது என்று விருந்தில் உரையாற்றிய திரு லியூ தெரிவித்தார்.

டாக்டர் பாலகிருஷ்ணன் பெய்ஜிங்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 70 தொழில்துறையாளர்களையும் மாணவர்களையும் சந்தித்தார்.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சீனாவில் இடம்பெறும் அரசாங்கங்களுக்கு இடைப்பட்ட மூன்று கூட்டுத் திட்டங்கள் பற்றி பேசியதாகவும் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கூறியது.

மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகமாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.