சிங்கப்பூரில் 16 வயது முதல் 25 வயது வரைப்பட்ட இளம் ரத்த நன்கொடையாளர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டில் குறைந்துவிட்டது. ரத்த நன்கொடையாளர்களின் மொத்த எண்ணிக்கை கூடி இருக்கிறது.
ஆனால் இளம் நன்கொடையாளர்கள் குறைவாக இருக்கிறது. இதனால் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கவலைப்படுகிறது. நோயாளிகளுக்கு அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படுகிறது.
நோயாளிகள் சிலருக்குக் குறித்த நேரத்தில் தொடர்ந்து ரத்தம் ஏற்ற வேண்டிய நிலையும் இருக்கிறது. இதனால் ரத்தம் அதிகம் தேவைப்படுகிறது.
இத்தகைய சூழலில் இளம் வயது முதலே மேலும் பலரும் ரத்த நன்கொடை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை சங்கம் சுட்டிக்காட்டியது.
இளம் ரத்த நன்கொடையாளர்கள் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 13,967 ஆக இருந்தது. இது சென்ற ஆண்டில் 10.3% குறைந்து 12,527 ஆக இறங்கிவிட்டது என்று சங்கம் தெரிவித்தது.
சென்ற ஆண்டில் மொத்த ரத்த நன்கொடையாளர்களில் இளம் நன்கொடையாளர்கள் அளவு 17% ஆக இருந்தது. இந்த விகிதம் 2021ஆம் ஆண்டில் 20% ஆகவும் 2011ஆம் ஆண்டில் 33% ஆகவும் இருந்தது.
இளம் கொடையாளர்கள் குறைந்தாலும் சென்ற ஆண்டில் மொத்த ரத்த நன்கொடையாளர்கள் எண்ணிக்கை 7% கூடி 69,032லிருந்து 74,154 ஆக உயர்ந்தது.
இருந்தாலும் வயது காரணமாக, நோய் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 600 பேர் ரத்த நன்கொடையை நிறுத்திவிடுகிறார்கள்.
வார முடிவு நாள்களிலும் பள்ளி விடுமுறை காலங்களிலும் நன்கொடையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆகையால் அந்தக் காலகட்டத்தின்போது எல்லா வகை ரத்த இருப்பும் 20% அளவுக்குக் குறைந்துவிடுகிறது.
குறிப்பிட்ட நாடுகளுக்கு அல்லது சில நாடுகளில் குறிப்பிட்ட வட்டாரங்களுக்குச் சென்று விட்டு வருவோர், பூச்சிகளால் ஏற்படக்கூடிய தொற்று நோய் காரணமாக 28 நாள்கள் முதல் நான்கு மாதம் வரைகூட ரத்த நன்கொடை செய்ய இயலாமல் போய்விடும். நன்கொடையாளர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகமாக்கி வர வேண்டியது உயிர்நாடியானது என்று சங்கம் வலியுறுத்தியது.
இளையர்களில் அதிகமானோர் இப்போதே தொடங்கி ஆயுள் முழுவதும் ரத்த நன்கொடை செய்யவேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டது.
சேகரிக்கப்படும் ரத்தம் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்று நினைப்பது தவறு. பார்க்கப்போனால் 34,000 நோயாயளிகளின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டிக்காக்கவும் அதை உயர்த்தவும் அவர்களுக்குத் தொடர்ந்து ரத்தம் தேவைப்படுகிறது என்பதை அது நினைவூட்டியது.

