நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட விவாதம்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 2023 வரவுசெலவுத் திட்ட விவாதம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது.
அந்த விவாதம் குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றுவார். அதை தொடர்ந்து அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு, செலவினத் திட்ட விவாதம் நடக்கும். ஒவ்வோர் அமைச்சின் திட்டங்களையும் மன்றம் விவாதிக்கும்.
நிதி அமைச்சர், இம்மாதம் 14ஆம் தேதி புதிய வரவுசெலவுத் திட்டத்தை மன்றத்தில் தாக்கல் செய்தார். சிங்கப்பூரர்களுக்குப் பண உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதில் இடம்பெற்று இருக்கின்றன.
புதிய வரவுசெலவுத் திட்ட விவாதம் ஒருபுறம் இருக்க, மோசடிகளைச் சமாளிப்பது போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர்கள் பல கேள்விகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
பங்ளாதேஷ் ஊழியர் மரணம்: அனுமான முறையிலான தீர்ப்பு
சிங்கப்பூரில் 2013ஆம் ஆண்டு முதல் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ரஜிப், 28, என்ற ஊழியர் வேலை பார்த்து வந்தார். உடல்நலனைப் பொறுத்தவரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை.
அவர், 2021 ஜூன் 18ஆம் தேதி கொரோனாவுக்கு எதிரான மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். அதற்கு 21 நாள்கள் கழித்து, 2021 ஜூலை 9ஆம் தேதி செம்பவாங் கப்பல் பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது அவர் மயங்கி விழுந்துவிட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைகள் பலன் அளிக்காமல் அன்று இரவு அவர் இறந்துவிட்டார். பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஊழியரின் இதயத் தசை அழன்று இருந்தது தெரிந்தது. அது கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம் என்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதுதான் மரணத்திற்குக் காரணம் என்பதை திட்டவட்டமாக பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. அந்த ஊழியரின் மரணம் பற்றி விசாரணை நடந்தது.
அது மருத்துவரீதியிலான துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம் என்று மரண விசாரணை அதிகாரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அதிகாரி, பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தனது தீர்ப்பை அளிக்கவில்லை. மரணத்திற்கான வேறு காரணங்கள் தெரியவில்லை என்பதே அந்தத் தீர்ப்புக்குக் காரணம்.
ஆகையால் மரணங்களுக்கான வாய்ப்புகளை சீர்தூக்கிப் பார்த்த அந்த அதிகாரி, ஊழியர் மரணம், கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அந்தத் தீர்ப்பை அடுத்து அந்த ஊழியரின் குடும்பத்திற்குத் தடுப்பூசி பாதிப்பு நிதி உதவித் திட்டத்தின்கீழ் ஆகஅதிகமாக $225,000 தொகை கொடுக்கப்படும்.
வடகொரியா சோதனை:
சிங்கப்பூர் கடும் கண்டனம்
வடகொரியா அண்மையில் நடத்திய ஏவுகணை சோதனையை சிங்கப்பூர் கடுமையாகக் கண்டித்து உள்ளது. அந்தச் செயல், கோபத்தைத் தூண்டிவிடும் ஆபத்தான ஒரு செயல் என்று தெரிவித்த சிங்கப்பூர், அது ஐநா பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தை மீறிய ஒரு செயல் என்றும் குறிப்பிட்டது.
வடகொரியா, கடந்த சில நாள்களில் இரண்டு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. அவற்றில் சனிக்கிழமை அது சோதித்த ஏவுகணை, கண்டம்விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையைப் போல் தெரிந்தது.
வடகொரியா, இத்தகைய செயல்களை உடனடியாக நிறத்த வேண்டும். அனைத்துலக கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் மதித்து அது செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் மீண்டும் வலியுறுத்தியது.

