சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் மூன்றாவது காலாண்டில் தனது நிகர லாபம் ஏழு மடங்கிற்கும் மேலாக கூடி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
முக்கியமான வழித்தடங்களில் வலுவான தேவை மீண்டும் ஏற்பட்டதே இதற்கான முக்கியமான காரணம்.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் எங்கும் பயணக் கட்டுப்பாடுகள் அகன்று இருக்கின்றன. இதையடுத்து கிழக்கு ஆசியாவில் பயணத் துறை மீட்சி கண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நான்காவது காலாண்டில் விமானப் பயணத் தேவை மேலும் சூடுபிடிக்கும் என்றும் நான்காவது காலாண்டு வளர்ச்சி, கொவிட்-19க்கு முன்பு இருந்த அளவில் சராசரியாக 77%ஐ எட்டி விடும் என்றும் எஸ்ஐஏ கணித்துள்ளது.
இருந்தாலும்கூட, செலவு அதிகரித்து இருப்பதாலும் எண்ணெய் விலை கூடுவதாலும் விமானப் போக்குவரத்து தொழில்துறை தொடர்ந்து பல சவால்களை எதிர்நோக்குவதாக அது எச்சரித்து இருக்கிறது.
இவற்றோடு அனைத்துலக வழித்தடங்களில் தங்கள் கொள்ளளவு ஆற்றலை அதிகப்படுத்த விமான நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் காரணமாக போட்டி கடுமையாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் எஸ்ஐஏ குறிப்பிட்டு உள்ளது.
எஸ்ஐஏவின் நிகர லாபம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுற்ற மூன்று மாத காலத்தில் $628 மில்லியனாகக் கூடியது.
இந்த லாபம், ஓராண்டுக்கு முன் $85 மில்லியனாக இருந்தது. முந்தைய காலாண்டைவிட நிகர லாபம் 12.7% கூடியிருக்கிறது. இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த வருவாய் 8% கூடி $4.85 பில்லியனாக உயர்ந்தது.
விமானச் சரக்குகளைப் பொறுத்தவரை தேவை பல சவால்களை எதிர்நோக்குவதாகவே இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக எஸ்ஐஏ தெரிவித்து உள்ளது.

