புருணையிலிருந்து வரவழைக்கப்படும் முட்டைகள் இங்குள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் முதன்முறையாக விற்கப்படுகின்றன. 'ஃபார்ம் ஃபிரெஷ் எக்ஸ்' என்று சந்தைப்படுத்தப்படும் அவை, 68 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் கிடைக்கின்றன. பத்து முட்டைகள் அறிமுக விலையாக $3.20க்கு விற்கப்படுகின்றன. கூடுதலான ஃபேர்பிரைஸ் கடைகளில் புருணை முட்டைகள் கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
மற்ற நாடுகளிலிருந்து ஃபேர்பிரைஸ் இறக்குமதி செய்யும் முட்டைகளின் விலைக்கு ஒப்பிடக்கூடியவையாக புருணை முட்டைகள் உள்ளன என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை கொள்முதல் அதிகாரி இங் ஆ இயாம் தெரிவித்தார்.
ஒப்புநோக்க, மலேசியாவில் இருந்து வரவழைக்கப்படும் 10 'பசார்' முட்டைகளின் விலையும் $3.20. உள்ளூர் முட்டை விநியோகிப்பாளரான 'டசூன் எக்ஸ்' மூலம், புருணையிலிருந்து வாரத்திற்கு 200,000 முட்டைகளை ஃபேர்பிரைஸ் இறக்குமதி செய்கிறது.
இதுகுறித்து திரு இங் கூறுகையில், "சிங்கப்பூருக்கு புருணை முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். இனி புருணையிலிருந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும். முட்டை இறக்குமதிகளை பல்வகைப்படுத்தி, விநியோகம் மற்றும் விலை நிலைத்தன்மையை எட்டுவதை உறுதிசெய்ய முடியும்," என்று சொன்னார்.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, உக்ரேன் உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து தற்போது ஃபேர்பிரைஸ் முட்டைகளைத் தருவிக்கிறது. ஃபேர்பிரைசின் முட்டை விற்பனையில் சிங்கப்பூர் முட்டைகள் ஏறக்குறைய பாதி அளவு பங்கு வகிக்கின்றன.
புருணையிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதில் ஓர் அனுகூலம் உள்ளது. தென்கிழக்காசியாவுக்கு வெளியிலிருந்து ஒப்புநோக்க, புருணையிலிருந்து இங்கு முட்டைகள் வந்துசேருவதற்கான காலம் குறைவு.
புருணையிலிருந்து கப்பலில் முட்டைகள் இங்கு வந்துசேர ஏழு நாள்கள் வரை பிடிக்கும். மாறாக, உக்ரேன் அல்லது ஆஸ்திரேலியாவிலிருந்து அவை இங்கு வர 21 நாள்கள் வரை ஆகும்.
முட்டைகளின் தாக்குப்பிடிக்கும் காலத்தை அதிகரிக்க, அவை குளிர்சாதன வசதியுடன் இங்கு கொண்டு வரப்படுகின்றன.