மீன் மொத்த விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரான ஹியா ஹான் ஹுவாட் (படம்), ஃபேர்பிரைஸ் பேரங்காடியைச் சேர்ந்த மூத்த குழுத் தலைவரான லிம் கியென் கோக் என்பவரிடம் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தது $43,500 லஞ்சம் வழங்கினார்.
தம்முடைய 'ஓஷன் டிரஸ்ட்' நிறுவனத்திடமிருந்து கூடுதல் மீன்களை வாங்க தூண்டுவதற்காக, 2013 ஜூலையிலிருந்து 2020 செப்டம்பர் வரை லிம்மிடம் ஹியா பணத்தை வழங்கினார்.
குறைந்தது $12,000 சம்பந்தப்பட்ட இரு ஊழல் குற்றச்சாட்டுகளை ஹியா, 65, நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார். எஞ்சிய தொகை சம்பந்தப்பட்ட ஆறு வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில்கொள்ளப்படும்.
ஃபேர்பிரைஸ் நிறுவனத்தில் லிம், 48, இப்போது பணியாற்றவில்லை. அவரது வழக்கு நிலுவையில் உள்ளது.
மூத்த குழுத் தலைவராக, ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் ஃபேர்பிரைஸ் நிறுவனத்திற்காக மீன்களை வாங்கும் நடவடிக்கையை மேற்பார்வையிட பணிக்கப்பட்டார்.
எந்த விநியோகிப்பாளரிடம் இருந்து எவ்வளவு மீன்களையும் கடலுணவையும் வாங்குவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் லிம்முக்கு இருந்தது.
ஹியா தமக்கு பணம் கொடுத்தால் 'ஓஷன் டிரஸ்ட்' நிறுவனத்திடமிருந்து தாம் கூடுதல் மீன்களை வாங்குவதாக 2013 ஜூலை வாக்கில் ஹியாவிடம் லிம் கூறியிருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டான் பெய் வெய் சொன்னார்.
லிம்முக்கு மாதம் $500 வழங்க ஹியா அப்போது ஒப்புக்கொண்டார்.
கடித உறைக்குள் பணத்தை வைத்து, ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பக்கத்தில் எவரும் இல்லாதபோது லிம்மிடம் நேரடியாக பணத்தை வழங்கி வந்தார் ஹியா.
லிம்முக்கு பணம் வழங்கும் நடைமுறை, 2020 செப்டம்பர் வரை தொடர்ந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.
ஹியாவுக்கு எட்டு மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வழக்கறிஞர் டான் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
ஹியாவுக்கு நேற்று $50,000 பிணை வழங்கப்பட்டது. மார்ச் 9ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட முதலாமவர் ஹியா கிடையாது.
முந்தைய விசாரணையில் கோ சுன் சியோங் என்பவர், தம்முடைய முன்னாள் முதலாளியுடன் சேர்ந்து லிம்முக்கு கிட்டத்தட்ட $25,000 லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

