சிங்கப்பூர் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து வரி செலுத்தப்படாத 1,600 அட்டைப்பெட்டிகள் கொண்ட சிகரெட்டை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவ்விரு ஆடவர்களுக்கும் 23 வயதாகிறது.
இந்த சிகரெட்டுகள் மூலம் ஏய்க்கப்பட்ட மொத்த வரி $216,000க்கும் அதிகம். இவற்றின் மூலம் ஏய்க்கப்பட்ட பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) $18,600க்கும் அதிகம் என்று சுங்கத்துறை நேற்று தெரிவித்தது.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த திடீர் சோதனையில், அந்த இரு ஆடவர்களிடமும் வேன் ஒன்றிலும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், கள்ள சிகரெட்டுகளைக் கண்டறிந்தனர்.
வேனைக் கொண்டு சிகரெட்டுகளைப் பெற்று அவற்றை விநியோகிக்க அடையாளம் தெரியாத ஒருவர் அவ்விரு ஆடவர்களில் ஒருவரை ஈடுபடுத்தியதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.
தமக்கு உதவ மற்றோர் ஆடவரை அவர் ஈடுபடுத்தினார்.
அந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்தது. இரு ஆடவர்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது.
சுங்கத்துறை சட்டம், ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது, விநியோகிப்பது, சேமித்து வைப்பது கடுமையான குற்றங்களாகும் என்று சுங்கத்துறை எச்சரித்து உள்ளது.

