செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5bf23845-5f8d-43a4-9a10-3b847a87c611
-

போலி கடன் விண்ணப்பங்கள் செய்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு

$16 மில்லியனுக்குமேல் மதிப்புடைய கடனுதவி பெறுவதற்காக, போலி கடன் விண்ணப்பங்களைச் செய்ததாகக் கூறப்படும் மூன்று ஆடவர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. 2018 மார்ச், ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே சோய் வெங் கீன் ஏட்ரியன், ஃபூங் சோங் ஹுங், வூ வாய் ஹூங் சேமுவல் ஆகிய மூவர், எட்டுப் பேருக்கு கடன் பெற்றுத் தருவதற்காக ஆறு நிதி நிறுவனங்களை ஏமாற்ற சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

மதிப்பீட்டிற்குரிய வருமான வரி ஆவணங்களை அந்த மூவரும் சமர்ப்பித்ததாக காவல்துறை கூறியது. அவற்றில், அந்த எட்டுப் பேரின் ஆண்டு வருமானம் கூட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஏமாற்றியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் 27 போலி தீர்மானங்களை அந்த மூவரும் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

போலி தீர்மானங்களை வழங்கியது நிரூபணமானால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹஜ் முன்பதிவு தளம் முடக்கம்

சிங்கப்பூர் முஸ்லிம்கள் தங்களுடைய ஹஜ் யாத்திரைக்குப் பதிவுசெய்வதற்காக பயன்படுத்தப்படும் 'மைஹஜ்' இணையவாசல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று இயங்கவில்லை. ஹஜ் யாத்திரைக்கான முன்பதிவு நேற்றுக் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று மாலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) இணையப் பக்கத்திற்குச் சென்று பார்த்தபோது, "ஹஜ் பதிவு முறை தொடர்பில், மைஹஜ்எஸ்ஜி இணையவாசல் தற்போது தொழில்நுட்பப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. இப்பிரச்சினையைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வரும் வேளையில், உங்களது புரிந்துணர்வை நாடுகிறோம். பதிவு முறை மீண்டும் இயங்கியவுடன் பொதுமக்களுக்கு நாங்கள் தெரிவிப்போம்," என்ற செய்தி இடம்பெற்றது.

நைஜீரிய காதல் மோசடிக் கும்பல் உறுப்பினருக்கு உதவியவருக்குச் சிறை

மலேசியாவிலிருந்து காதல் மோசடிகளைச் செய்த நைஜீரிய குற்றக் கும்பல் உறுப்பினருடன் காதல் வயப்பட்ட சுஹைலி சுபார்ஜோ, அவருடன் சேர்ந்து ஒரு பிள்ளையையும் பெற்றுக்கொண்டார். இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவோலோலா ஒலாடாயோ ஒபேயேமி, மோசடிக்கு ஆளானவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு அதை மாற்றிவிட சுஹைலியை பயன்படுத்திக்கொண்டார்.

குற்றவியல் நடவடிக்கை மூலம் வேறொருவர் பணத்தைப் பெற்றுக்கொள்ள உதவியதாக இரு குற்றங்களை சுஹைலி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.