சமூகப் பிரிவினையையும் இரண்டு சிங்கப்பூர் உருவாவதையும் தவிர்க்க, இருதரப்பு சிங்கப்பூரர்களுக்கு இடையில் வளங்களை முறையாகப் பகிர்ந்தளிப்பது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் (படம்) குறிப்பிட்டு உள்ளார்.
அரசாங்கக் கொள்கைகளின் மூலாதாரமாக அது விளங்க வேண்டும் என்றும் கூறிய அவர், சமத்துவமின்மையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிடில் அதிகம் சம்பாதிப்போருக்கு ஏற்ற ஒரு சிங்கப்பூரும் பெரும்பான்மையான சிங்கப்பூரர்களுக்கான ஒரு சிங்கப்பூரும் உருவாகிவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரு சிங்கப்பூர் என்னும் சூழலில் சமூக ஒற்றுமை என்பது கடினமான ஒன்றாக ஆகிவிடும் என்றார் அவர்.
பாட்டாளிக் கட்சித் தலை
வரான திரு சிங், வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், வசதி படைத்த வர்களிடம் பணத்தைப் பெற்று வசதியற்றோருக்குத் தரக்கூடிய 'ராபின் ஹூட் பட்ஜெட்' என்று விமர்சிக்கப்படுவதாகவும் அதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார்.
இரு பிரிவுகளாக சமூகம் உருவாகாமல் காக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் திரு சிங்.
"தேவையானவற்றை போதுமான அளவுக்குச் செய்யாவிடில் இரு சிங்கப்பூர்கள் உருவாகி
விடுமோ என்று இதுவரை நிலவி வந்த அச்சுறுத்தல் உண்மையாகி விடலாம்," என்று கூறினார்.
இரு சிங்கப்பூர்கள் என்பதை விவரித்த அவர், "அதிக சம்பளம் பெறுவோரையும் அதற்கான வாய்ப்புகளையும் பெற்றிருக்கக்கூடியதாகவும் ஒரு பொருளியல் மையமாக உலகத்தோடு தொடர்புடையதாகவும் ஒரு சிங்கப்பூர் இருக்கும்," என்றார்.
"அதேநேரம் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் வசிக்கக்கூடியதாக மற்றொரு சிங்கப்பூர் இருக்கும்.
"சமூக முன்னேற்றம் மெதுவடையும் என்னும் கருத்தைக் கொண்டதாக, அதிக வீட்டு விலையுடன் தொடர்புடையதாக அந்த இரண்டாவது சிங்கப்பூர் இருக்கும்," என்றும் திரு சிங் எடுத்துரைத்தார்.
"பல்லாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப்போல வீவக வீட்டு உரிமையாளர்கள் கொண்டோமினிய வீட்டுக்கோ தரை வீட்டுக்கோ முன்னேறக்கூடிய நிலை தற்போது இல்லை. இதர நாடு
களைப்போல் இல்லாமல், கார் என்பது பெரும்பாலான மக்களுக்கு கைகெட்டா ஆடம்பரம் என்ற நிலையும் இங்கு உள்ளது.
"கடந்த காலங்களில், பள்ளிப்படிப்பை சிறப்பாகச் செய்யாவிட்டாலும் கடினமாக உழைத்து செல்வந்தராகக் கூடிய நிலைமை இருந்தது.
"ஆனால், பள்ளிப்படிப்பில் தேறாமல், கஷ்டப்பட்டு உழைத்தாலும் வெற்றியும் செல்வ வளமும் கிடைக்காமல் போகலாம் என்பதே தற்போதைய நிலைமை," என்றார் அவர்.
விலை உயர்ந்த சொத்து
களுக்கும் ஆடம்பர வாகனங்
களுக்கும் வரி உயர்த்தப்படும் என்ற வரவுசெலவுத் திட்ட அறிவிப்பை பாட்டாளிக் கட்சி ஆதரிப்பதாக திரு சிங் கூறினார்.
அதிக சம்பளம் ஈட்டுவோர், விகிதாச்சார அடிப்படையில் அதிக வரி செலுத்தும்போது படிப்படியாக முன்னேறக்கூடிய சமூகத்தை உருவாக்கலாம் என்னும் இந்த யோசனையை தமது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் சொன்னார்.