மூன்று வாரங்களில் மூன்றாம் முறை தடை; எஸ்எம்ஆர்டி வருத்தம்
வடக்கு-தெற்கு ரயில்பாதையில், நேற்றுக் காலை பயணிகள் ஏறக்குறைய 25 நிமிடங்கள் வரையிலான தாமதத்தால் சிரமப்பட்டனர்.
உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்திற்கும் அங் மோ கியோ ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் இவ்வாறு நேர்ந்தது.
இந்தப் பாதையில் மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக இவ்வாறு ரயில் சேவை தாமதமானது.
முன்னதாக இம்மாதம் 6ஆம் தேதி ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாற்றால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் இம்மாதம் 8ஆம் தேதி, ரயிலின் தடத்தை மாற்றிவிட உதவும் விசைக்கருவியில் கோளாறு ஏற்பட்டதால் ரயில் சேவை தாமதமானது.
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனம், நேற்றுக் காலை 10.10 மணியளவில் சேவை தாமதமானது குறித்து அறிவித்தது.
மரினா சவுத் பியரை நோக்கிச் செல்லும் பாதையில், உட்லண்ட்சில் இருந்து ஈசூன் செல்வதற்குக் கூடுதலாக 15 நிமிடம் பிடிக்கும் என்று பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்திற்கும் அங் மோ கியோ நிலையத்திற்கும் இடையே பயண நேரம் 25 நிமிடங்கள் கூடுதலாகும் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று முற்பகல் 11.10 மணியளவில் ரயில் சேவை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புவதாக நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டது.
அதைத் தொடர்ந்து 11.15 மணிக்கு, சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நேரத்தில் உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்திற்கும் அங் மோ கியோ ரயில் நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஈசூன் நிலையத்தில் ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் சேவை இவ்வாறு பாதிக்கப்பட்டதாக, நேற்றுக் காலை 11.30 மணியளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
ஈசூன் நிலையத்தில் பயணிகள் அந்த ரயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அது கூறியது. பின்னர் அந்த ரயில் பரிசோதனைக்காக பழுது பார்க்குமிடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.
அதிலிருந்த பயணிகள் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட மாற்றுப் பாதைகளில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.

