பொதுப் பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (சிஓஇ) முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
நேற்று வெளியான ஏலக்குத்தகை முடிவில், இதற்கான கட்டணம் $118,001 ஆனது.
முந்தைய ஏலக்குத்தகையைக் காட்டிலும் இது 12.4 விழுக்காடு அதிகம்.
முன்பு இக்கட்டணம் $105,002 ஆக இருந்தது. பொதுப் பிரிவில் மோட்டார்சைக்கிள் தவிர்த்து எந்த வாகனத்தையும் பதிவு செய்ய இயலும்.
இருப்பினும் பெரும்பாலோர் பெரிய கார்களைப் பதிவுசெய்ய இதைப் பயன்படுத்துவர்.
இம்முறை வர்த்தக வாகனங்களுக்கான கட்டணமும் இதுவரை இல்லாத அளவாக $87,790 ஆக உயர்ந்துள்ளது.
இந்தப் பிரிவில் சிஓஇ கட்டணம் 3.1 விழுக்காடு அதிகரித்து உள்ளது.
பொதுவாக அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
சிறிய கார்களுக்கும் மின்கார்களுக்கும் கட்டணம் $556 அதிகரித்து $86,556 ஆனது. ஆகக் குறைவாக, 0.7 விழுக்காட்டுக் கட்டண உயர்வு இந்தப் பிரிவில் பதிவானது.
பெரிய கார்களுக்கும் வலுவான மின்கார்களுக்கும் சிஓஇ கட்டணம் கிட்டத்தட்ட ஒன்பது விழுக்காடு உயர்ந்தது.
இந்தப் பிரிவில் முன்பு $105,524ஆக இருந்த கட்டணம் தற்போது $115,001க்கு அதிகரித்துள்ளது.
மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணம் 5.1 விழுக்காடு உயர்ந்து $12,189 ஆனது. சென்ற ஏலக்குத்தகையில் அது $11,602ஆக இருந்தது.

