தரவு சேமிப்பு சேவை வழங்கும் 'எஸ்டி டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர்' (எஸ்டிடி ஜிடிசி) எனும் தரவு நிலையத்தில் இணைய ஊடுருவிகள் கைவரிசையக் காட்டியுள்ளனர்.
இதனால் 1,200க்கு மேற்பட்டோரின் கடவுச் சொற்கள் இணையத்தில் கசிந்ததாகக் கூறப்பட்டது. சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது இந்நிறுவனம்.
தகவல்கள் 2021ஆம் ஆண்டில் திருடப்பட்டதாகவும் இருப்பினும் அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களின் தரவுகளில் பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் நிறுவனம் கூறியது.
இணைய ஊடுருவல் குறித்து இணையப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான 'ரீசெக்யுரிட்டி' தகவல் வெளியிட்டது. மோசடிக்காரர்கள் வாடிக்கையாளர்களின் கடவுச் சொற்களைப் பயன்படுத்தி இணையத்தளங்களில் நம்பகமான பயனாளர்களைப்போன்று உலா வந்திருக்கக்கூடும் என்று அது கூறியது.
ஆனால் அந்த கடவுச் சொற்கள் காலாவதியானவை என்று எஸ்டிடி ஜிடிசி தெரிவித்தது.
அமேசான், அலிபாபா, மோர்கன் ஸ்டேன்லி, ஸ்டார்ஹப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தோரின் மின்னஞ்சல் முகவரிகளும் மறைச்சொற்களும் திருடப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
எஸ்டிடி ஜிடிசி நிறுவனம், இந்தோனீசியா, ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் தரவு நிலையங்களை அமைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஊடுருவல் குறித்த தகவல் கிடைத்ததுமே உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதில் பாதிப்பு ஏதுமில்லை எனத் தெரியவந்ததாக அது கூறியது.