தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் கடந்த திங்கட்கிழமை காலை இரு மோட்டார் சைக்கிள்களும் சிறிய ரகப் பேருந்தும் மோதிக்கொண்டதில் மாது ஒருவர் மாண்டார்.
யாஸ்மின் அப்துல்லா எனும் அந்த 26 வயதுப் பெண்ணுக்குத் திருமணமாகி மூன்று வாரங்கள் ஆகின்றன.
கணவர் முமகது ஸாகித் அப்துல் கஃபாருக்கு வயது 29. மனைவியைத் தனது மோட்டார் சைக்கிளில் அன்றாடம் காலை அவர் பணிபுரியும் பல் மருந்தகத்தில் விட்டுச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திங்கட்கிழமை நடந்த விபத்தில் திரு ஸாகித் உயிர்பிழைத்த நிலையில் மனைவி யாஸ்மின் உயிரிழ்ந்தார்.
இணையப் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் ஸாகித்தின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது சகோதரி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த அவருக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
யாஸ்மினின் தந்தையான 64 வயது அப்துல்லா சன்யார், சென்ற மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற திருமணம் தனது மகளின் வாழ்வில் இனிய தருணம் என்றும் திருமண வாழ்வை அவர் மிகவும் விருப்பத்துடன் எதிர்நோக்கியதாகவும் பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் தெரிவித்தார்.
திருமணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடரவும் வீடு வாங்கவும் யாஸ்மின் ஆர்வம் கொண்டிருந்தார்.
பட்டயக் கல்வி முடிந்த பிறகு உடல்நலக் கோளாற்றால் அவரால் மேற்கல்வியைத் தொடர இயலவில்லை என்றும் தனது மகள் எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வருபவர் என்றும் தந்தை அப்துல்லா கூறினார்.
அன்புக்குரிய தனது தங்கையின் மறைவால் அனைத்தையும் இழந்ததுபோல் உணர்வதாகக் கூறினார் யாஸ்மினின் அக்கா அலியா ஃபட்டின்.
விபத்தின் தொடர்பில் சிறிய ரகப் பேருந்தை ஓட்டிய 54 வயது ஆடவர் சம்பவ தினத்தன்றே கைது செய்யப்பட்டார்.
விசாரணை தொடர்கிறது.