தேவையைப் பூர்த்தி செய்ய புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி இடமாற்றம்
புக்கிட் பாத்தோக் வெஸ்ட், தெங்கா நகரம் ஆகிய வட்டாரங்களில் தொடக்கப்பள்ளி ஒன்றாம் வகுப்புக்குக் கூடுதல் இடம் தேவைப்படுவதால் புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அது தெங்கா வட்டாரத்துக்கு அருகில் இடமாற்றம் செய்யப்படுகிறது. புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியின் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வளாகம் 2027ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது. இப்பள்ளி தற்போதைய அளவைவிட பெரிதாக இருக்கும் என்றும் மாணவர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களை கூடுதலாக இப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்று கல்வி துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியின் புதிய வளாகத்தில் எட்டு ஒன்றாம் வகுப்புகள் இருந்தன. புதிய வளாகத்தில் ஒன்பது ஒன்றாம் வகுப்புகள் இருக்கும்.
புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியுடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடாமல் திடீரென்று அதை இடமாற்றம் செய்வது குறித்து புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை நேற்று முன்தினம் கல்வி அமைச்சிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் துணை அமைச்சர் கானின் பதில் அமைந்தது.
புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி தற்போது உள்ள இடத்தில் மூன்று பிடிஓ திட்டங்கள் அண்மையில் நிறைவடைந்ததையும் திரு முரளி சுட்டினார்.
'விசாரணைக்குப் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்'
விற்பனைத் தரவுகள் மிகைப்படுத்தப்பட்டது குறித்து எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நடத்த அந்நிறுவனத்திற்குப் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனம் நடத்தும் விசாரணை எப்போது நிறைவடையும் என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (பாட்டாளிக் கட்சி) திரு ஜெரால்டு கியாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
விசாரணை மூலம் பெறப்படும் முழு விவரங்களையும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் பொதுமக்களிடம் பகிர்ந்துகொள்ளுமா என்றும் அவர் கேட்டார்.
விசாரணை மூலம் கிடைக்கும் தரவுகளுக்கும் பொது நிதிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் டியோ கூறினார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தின் விற்பனைத் தரவுகளைக் கொண்டு அதற்கு வழங்கப்படும் நிதியின் அளவு நிர்ணயிக்கப்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.
பொது நிதியுடன் எவ்வித நேரடித் தொடர்பு, தாக்கம் இல்லாததால் விசாரணை மூலம் பெறப்படும் தரவுகளைப் பொதுமக்களிடம் பகிர்ந்துகொள்வதும் பகிர்ந்துகொள்ளாததும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தின் விருப்பம் என்று திருமதி டியோ கூறினார்.
புதிய தற்காப்புப் படைத்
தலைவர் நியமனம்
மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைவராக ரியர் அட்மிரல் ஏரன் பெங் யாவ் செங் (இடது) பதவி ஏற்க இருக்கிறார். தற்போது லெஃப்டினென்ட் ஜெனரல் மெல்வின் ஓங் சு கியட் (வலது) அப்பதவியை வகிக்கிறார். தற்காப்புப் படைத் தலைவர் பதவியை கடற்படைத் தலைவராக இருந்த ஒருவர் ஏற்பது இதுவே முதல்முறை.
41 வயது ரியர் அட்மிரல் பெங் 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் இணைந்தார். அவர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர் குடியரசு கடற்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக, தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படை ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்தார்.
ரியர் அட்மிரல் பெங்கின் தலைமையின்கீழ் கடற்படையில் அமைப்புரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு திறன்கள் மேம்பாட்டுக்கும் எதிர்காலத்துக்குத் தயாராவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.

