சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 'மைரெஸ்பாண்டர்ஸ' செயலியில் தொண்டூழியர்களாகப் பதிவு செய்துகொண்டவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல உதவிகளைச் செய்துள்ளனர். அவர்கள் கையாண்ட 7,650 சம்பவங்களில் பாதி, இதயச் செயலிழப்புடன் தொடர்பானவை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை அவர்கள் இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி வழங்கினர். சிறு தீச்சம்பவங்களை எதிர்கொள்ளவும் அவர்கள் உதவினர்.
யாராவது ஒருவர் இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டாலோ அல்லது சிறு தீச்சம்பவங்கள் நிகழ்ந்தாலோ சம்பவ இடத்திலிருந்து 400 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் சமூக 'ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்' தொண்டூழியர்
களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.
அவசரநிலை ஏற்பட்டால் அதை உடனடியாக எதிர்கொள்ளும் வகையில் அடுத்த சில ஆண்டுகளில் குடியிருப்புப் பகுதிகளிலும் தனியார் வாகனங்களிலும் கூடுதல் தீயணைப்புக் கருவிகளும் இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க உதவும் சாதனங்களும் பொருத்தப்படும் என்று திரு சண்முகம் கூறினார்.
இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடங்களுக்கு ஒரு தீயணைப்புக் கருவி என்ற அணுகுமுறை நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புக் கருவிகள் மின்தூக்கித் தளத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.
இதுதொடர்பாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மன்றங்கள், தெமாசெக் அறநிறுவனம் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இணைந்து செயல்படும் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க உதவும் கருவிகளைப் (ஏஇடி) பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் 250 மீட்டர் தூரத்துக்கு ஒரு கருவி பொருத்துவதே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் இலக்கு என்றார் அவர்.
சேவ் எ லைஃப் திட்டத்தின்கீழ் வீவக குடியிருப்புக் கட்டடங்கள், கூட்டுரிமை குடியிருப்புகள் ஆகியவற்றில் உள்ள மின்தூக்கித் தளங்களில் 51,000 ஏஇடி கருவிகளை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொருத்தியிருப்பதாக திரு சண்முகம் கூறினார்.
பூங்காக்கள், தனியார் மற்றும் பொது இடங்களிலும் கூடுதல் ஏஇடி கருவிகளைப் பொருத்த மக்கள் கழகம், தேசிய பூங்காக் கழகம் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இணைந்து செயல்படும் என்றார் அமைச்சர் சண்முகம்.
இவ்வாண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஏஇடி ஆன் வீல்ஸ் திட்டத்தில் சிங்போஸ்ட் நிறுவனமும் சேருவதாக அமைச்சர் சண்முகம் அறிவித்தார். சிபிஆர் எனும் இதய இயக்க மீட்பு சிகிச்சை செய்யவும் ஏஇடி கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ளும்படி பொதுமக்களை திரு சண்முகம் கேட்டுக்கொண்டார். அத்துடன் தீயணைப்பு, முதலுதவித் திறன்
களையும் பொதுமக்கள் கொண்டிருப்பது நல்லது என்று அவர் கூறினார்.