பொம்மை தயாரிக்கும் 'லெகோ' நிறுவனம், புதிய கதாபாத்திரங்களைச் சித்திரிக்கும் பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உடற்குறையுள்ளோர், மனநலச் சிக்கல் உடையோர் ஆகியோரை இவை பிரதிபலிக்கின்றன. 'பிரெண்ட்ஸ்' எனும் தலைப்பில் விற்பனைக்கு வந்துள்ள புதிய பொம்மைகள் சிங்கப்பூரில் கிடைக்கின்றன.
இன்றைய நவீன உலகில் புதிய சவால்களை எதிர்கொள்ளும் பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்திரித்திருப்பதாக 'லெகோ' நிறுவனம் கூறியது.
எடுத்துக்காட்டாக 'ஆட்டம்' எனும் கதாபாத்திரம் துணிச்சலுடன் செயல்படக்கூடியது. இதன் ஒரு கரத்தில் முழங்கைக்கு மூட்டுக்குக்கீழான பாகம் இல்லை.
'பைஸ்லி' எனும் திறமைவாய்ந்த இசைக்கலைஞருக்கு அதீத கூச்ச சுபாவம்.
இணைய விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்ட 'நோவா'வின் கூரிய நாக்கு அனைவரையும் பதம் பார்க்கும் என்பதால் தனிமை அதன் பிரச்சினை.
இப்படி, பல நிறத்தவர், பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றுவோர் என மனிதர்கள் மட்டுமன்றி உடற்குறையுள்ள 'பிக்கிள்' எனும் நாயும் புதிய பொம்மைகளில் அடங்கும்.
இந்தக் கதாபாத்திரங்கள் பங்கேற்கும் 44 நிமிடக் காணொளி ஒன்று யூடியூப்பில் வெளியாகியுள்ளது. காணொளியின் அடுத்தடுத்த பாகங்கள் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
'லெகோ பிரெண்ட்ஸ்' பொம்மைகளை சிங்கப்பூரில் 'ஷாப்பி' இணைய வர்த்தகத்தளத்தில் இடம்பெறும் அங்கீகரிக்கப்பட்ட 'லெகோ' கடைகளிலும் 'பிரிக்ஸ் வேர்ல்டு' கடையில் இருந்தும் வாங்கிக்கொள்ளலாம்.
அனைவரையும் உள்ளடக்குதலை சிறுவர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக 'லெகோ' நிறுவனம் கூறியது. அண்மையில் 'பஃபின் புக்ஸ்', 'ஹஸ்புரோ' போன்ற நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.