மீடியாகார்ப் நிறுவனம் அதன் 'மீகனெக்ட்' பயனாளர்களில் ஏறக்குறைய 14,000 பேரின் கணக்குகள் இணைய ஊடுருவலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மறைச்சொற்களை மாற்றியமைக்கும்படி பயனாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மீடியாகார்ப்பின் 'மீவாட்ச்' இணையத்தள சேவை உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதற்கான கடவுச்சொற்கள் திருடப்பட்டன. இருப்பினும் அவை இணையத்தில் கசியவில்லை.
சம்பவம் குறித்த விசாரணையில் திருடப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்று நிறுவனம் கூறிற்று.
கட்டண விவரங்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை.
சென்ற மாத இறுதியில் ஊடுருவல் குறித்து அறிந்துகொண்டதாகவும் அதன் தொடர்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதாகவும் மீடியாகார்ப் நிறுவனம் சொன்னது.
தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு இதுகுறித்துத் தகவல் அளித்ததாகவும் அது குறிப்பிட்டது.
சில பயனாளர்கள் பல்வேறு தளங்களுக்கும் ஒரே கடவுச்சொல் அல்லது மறைச்சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம்.
எனவே இந்த இணையத் தாக்குதல் மூலம் பயனாளர்களின் மற்ற கணக்குகளை ஊடுருவ முயல்வது தாக்குதல்காரர்களின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயனாளர்கள் அவர்களது மற்ற கணக்குகள் எதற்காவது அதே கடவுச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று சோதிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டது.
பயனாளர்களின் மொத்த எண்ணிக்கையில் மிகக் குறைவான விகிதத்தினரே இணைய ஊடுருவலால் பாதிக்கப்பட்டதாக மீடியாகார்ப் தெரிவித்தது.
இச்சம்பவத்தால் நிறுவனத்தின் செயலாக்கமோ சேவையோ பாதிக்கப்படவில்லை என்று மீடியாகார்ப் பேச்சாளர் கூறினார்.
தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பைத் தீவிரமாகக் கருதுவதாகவும் அவற்றைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

