பால்மாவு திருடிய ஆடவருக்குச் சிறை
என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் இருந்து எட்டு பால்மாவு டின்களைத் திருடி இணையத்தில் விற்கத் திட்டமிட்ட ஆடவருக்கு நேற்று மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'டாய்ஸ் ஆர் அஸ்' கடையில் இருந்து இவர் $214 மதிப்புள்ள பொம்மைகளைத் திருடியதாகவும் கூறப்பட்டது.
சென் யிசியான் ஜோஷுவா எனும் அந்த 34 வயது ஆடவர், $422.40 மதிப்புள்ள பால்மாவை விற்க முனைந்தாலும் பொம்மைகளைத் தன் குழந்தைகளுக்காகத் திருடியதாகக் கூறினார். திருட்டு தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் மேலும் ஆறு பால்மாவு டின்கள் இருந்தன. அவையும் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுமத்தப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
அரசாங்க அமைப்புகளை ஏமாற்றிய ஆடவர்; 13 மாதச் சிறைத்தண்டனை
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அரசாங்கம் அறிவித்த நிதியாதரவுத் திட்டங்கள் தொடர்பான ஏமாற்று நடவடிக்கைகளுக்காக கே கா லியோங்கிற்கு 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 31 வயது ஆடவர் அரசாங்க அமைப்புகளை ஏமாற்றுவதற்கான சதித்திட்டங்களைத் தீட்டியவர்.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் ஆகஸ்டு மாதத்திற்கும் இடையே, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் வேலை ஆதரவுத் திட்டம் தொடர்பில் பொய்யான தகவல்களை இவர் சமர்ப்பித்தார். ஆதரவுத் தொகையாக $50,326ஐப் பெறுவது நோக்கம். இருப்பினும் ஆணையம் இதைக் கண்டுபிடித்ததால் பணம் வழங்கப்படவில்லை என்று காவல்துறை நேற்று தெரிவித்தது. மேலும், 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் தனக்குத் தற்காலிக நிவாரண நிதியாக $500 வழங்கக் கோரி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் விண்ணப்பித்தார். ஒருமுறை பெறும் இந்த வழங்குதொகையை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஏமாற்று நடவடிக்கைகள் தொடர்பில் இவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றை ஆடவர் ஒப்புக்கொண்டார். ஏமாற்றிய தொகையைப் பின்னர் இவர் செலுத்திவிட்டார். இவர் வேலைபார்த்த 'கிங்ஸ் ஸ்பா' நிறுவனத்தின் ஊழியர்கள் பலருக்கு இதேபோன்ற குற்றங்களுக்காக முன்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

