ஆரஞ்சு விளக்கை வெண்மை விளக்காக மாற்றும் ஆணையத்தின் திட்டம் நிறைவு
நிலப் போக்குவரத்து ஆணையம் வழிவழியாக இருந்து வரும் ஆரஞ்சு வெளிச்ச வீதி விளக்குகளுக்குப் பதிலாக அதிக வெளிச்சம் தரக்கூடிய வெண்மை நிற (எல்இடி) விளக்குகளைப் பொருத்தும் ஓராண்டுகால செயல்திட்டத்தை அண்மையில் நிறைவு செய்தது.
தீவு முழுவதும் இப்போது 110,000க்கும் மேற்பட்ட வீதி விளக்குகளை இந்த ஆணையம் நிர்வகிக்கிறது. அந்த விளக்குகளில் கிட்டத்தட்ட 99 விழுக்காட்டு விளக்குகள் புதிய, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடிய அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன.
சாலைகள் கட்டப்பட்டு வருவதால் சில ஆரஞ்சு வெளிச்ச விளக்குகளை இன்னமும் மாற்ற வேண்டி இருக்கிறது என்று ஆணையம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. வெண்மை விளக்கு மாற்றுத் திட்டம் 2014ல் தொடங்கியது. அந்தத் திட்டம் நிறைவடைந்து இருக்கிறது.
என்றாலும் ஆணையம் தொடர்ந்து புதிய விளக்குகளுக்குப் பொறுப்பேற்பதால் இந்த வீதி விளக்கு மேம்பாட்டுச் செயல்திட்டம் தொடர்ந்து இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டது.
எல்இடி விளக்குக்கு மாறி இருப்பதால் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட கிலோவாட் மணி மின்சாரம் மிச்சமாக வழி பிறந்திருக்கிறது என்றது ஆணையம்.
இந்த அளவு, ஓராண்டு காலத்திற்கு கிட்டத்தட்ட 6,000 நாலறை வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்திற்கு ஒப்பானது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் $5 மில்லியனில் இருந்து $7.5 மில்லியன் வரை மின் கட்டணம் மிச்சமாகிறது.
வீதி விளக்குகளைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு இப்போது சுமார் 78 மில்லியன் கிலோவாட் மணியாக உள்ளது. இந்த அளவு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 105 மில்லியன் கிலோவாட் மணியாக இருந்தது.
வழக்கமான விளக்குகளைவிட எல்இடி விளக்குகள் 25% குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும். எல்இடி விளக்குகள் பிரகாசமாகவும் ஒளிரும் என்று ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது.
எல்இடி விளக்குகளை 2010 முதல் ஆணையம் பரிசோதித்துப் பார்த்தது. எல்இடி விளக்குகளைப் பராமரிக்க வேண்டிய தேவையும் குறைவு என்பது தெரியவந்தது.
ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் விளக்குகள் மூன்றாண்டு காலம் உழைக்கும்.
ஆனால், எல்இடி விளக்குகள் சராசரியாக 10 ஆண்டு காலம் ஒளி கொடுக்கக்கூடியவை.
லிட்டில் இந்தியாவின் தேக்கா லேன், நார்த்தம்பர்லேண்ட் ரோடு ஆகியவற்றில் எல்இடி விளக்குகளை ஆணையம் பரிசோதிக்கத் தொடங்கியது.
பிறகு 2014ல் இரண்டு நிறுவனங்களுக்கு அது $17.6 மில்லியன் குத்தகையை ஆணையம் அளித்தது.
அதன்படி 2018ஆம் ஆண்டு வாக்கில் 4,000 விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டன.
பிறகு மத்திய சிங்கப்பூரில் 2019ல் மேலும் 25,000 விளக்குகள் $76.3 மில்லியன் செலவில் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதாக ஆணையம் கூறியது.
இதர இடங்களில் ஒளிரும் ஆரஞ்சு விளக்குகள் 2022ல் எல்இடி விளக்குகளாக மாறும் என்று ஆணையம் அப்போது தெரிவித்து இருந்தது.

