டக்கோட்டா கிரசெண்டில் உள்ள வீவக புளோக் 58ன் படிக்கட்டில் 32 வயது ஆடவர் வெள்ளிக்கிழமை இறந்துகிடந்தார்.
அங்கு அவர் அசைவற்றுக் கிடந்ததாகவும் அவர் மரண மடைந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாகவும் காவல்துறை கூறியது.
தொடக்க புலன்விசாரணைகளைப் பார்க்கையில், அந்த மரணத்தில் சூது இருப்பதாக சந்தேகம் எழவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.
மரணமடைந்தவர் அந்தப் பகுதியில் வசிப்பவர் என்றும் ஆயுதம் எதுவும் சம்பவ இடத்தில் காணப்படவில்லை என்றும் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறை வகைப்படுத்தி இருக்கிறது. புலன்விசாரணை தொடர்கிறது.
இதனிடையே, பீச் ரோட்டில் இருக்கும் கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கார்பேட்டையில் 70 வயது ஆடவர் சனிக்கிழமை காலையில் அசைவின்றி கிடந்தார்.
அவரைப் பரிசோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரி, அந்த ஆடவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தார் என்று காவல்துறை குறிப்பிட்டது. அந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறை வகைப்படுத்தி இருக்கிறது.
மைக்கல் என்ற அந்த 70 வயது ஆடவர் கொஞ்ச நாள்களாகவே உடல்நலமின்றி இருந்ததாக வும் அவரின் கால்கள் அடிக்கடி வீங்கிவிடும் என்றும் தெரிகிறது.
ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியது.

