தற்காப்பு அமைச்சு, 2030ஆம் ஆண்டுக்குள் மேலும் எட்டு எஃப்-35பி ரக போர் விமானங்களை வாங்கும். இதன் காரண மாக அவற்றின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயரும்.
அந்த ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானங்களுடன், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை தனது போர் அனுகூலங்களை மேலும் கூர்தீட்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தனது அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது தெரிவித்தார்.
உலகின் ஆக நவீன எஃப்-35பி ரக விமானங்கள் காரணமாக ஆகாயப்படையின் ஆற்றல் மட்டுமன்றி, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஆற்றலும் மேம்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆகாயப்படையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் 2030களின் நடுப்பகுதி முதல் கட்டம்கட்டமாக ஓய்வுபெறவிருப்பதை அவர் சுட்டினார். வலுவான தற்காப்புச் செலவினத்திற்குப் பல ஆண்டு காலமாக நிலையான, வலுவான ஆதரவு அளித்துவரும் நாடாளுமன்றத்திற்கு அமைச்சர் நன்றி கூறினார்.
இதனிடையே, மேலும் எட்டு எஃப்-35பி போர் விமானங்களை வாங்குவது என்ற முடிவு, இம்மி பிசகாமல் எல்லாவற்றையயும் பரந்த அளவில் அலசி ஆராய்ந்து மதிப்பிட்டு அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒன்று என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
அந்த முடிவு, தருவிப்பு ஆணைகள் அதிகமாகி, அதனால் செலவு குறையக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, காலத்திற்கு ஏற்ற சரியான ஒரு நேரத்தில் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சு விளக்கியது.