1,000 மரங்கள் நட இலக்கு
தஞ்சோங் பகார் நகரமன்றம் ஏற்பாட்டில் நேற்று நடந்த மரம் நடும் நிகழ்ச்சியில் தெலுக் பிளாங்கா குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர். நேற்று தொடக்கமாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மொத்தம் 1,000 மரக்கன்றுகளை நடுவது இலக்காக இருக்கிறது.
சிங்கப்பூர் முழுவதும் 2030ஆம் ஆண்டுவாக்கில் ஒரு மில்லியன் மரங்களை நடுவது தேசிய இலக்காக இருக்கிறது. அதற்கு உறுதுணையாக நேற்றைய நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சோங் பகார் நகரமன்ற தலைவரும் ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான மெல்வின் யோங் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மரம் நடும் நிகழ்ச்சி, வலுவான சமூக உணர்வை வளர்க்கிறது என்றும் சுற்றுப்புறத்தில் அதிக நாட்டம் கொள்ள ஊக்குவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
புதுவகை மோசடி: 59 பேர்
$1.4 மில்லியன் இழந்தனர்
கணினியில் புதிதாக ஒரு மோசடி தலைகாட்டி இருக்கிறது. தொழில்நுட்ப ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஓர் அறிவிப்பு கணினித் திரையில் இடம் பெறுகிறது.
'உங்கள் வங்கி அல்லது கடன் அட்டை விவரங்களைத் தரவில்லை என்றால் கணினி கோளாறாகிவிடும்' என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கும். அதை நம்பி குறைந்தபட்சம் 59 பேர் தங்கள் சொந்த தகவல்களைத் தெரிவித்து ஏமாந்து, ஜனவரியில் இருந்து குறைந்தபட்சம் $1.4 மில்லியன் பணத்தை இழந்துவிட்டனர்.
காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் கூட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்தன. மோசடிப் பேர்வழிகள் கூறியதைக் கேட்டு மென்பொருள் எதையாவது யாராவது பதிவிறக்கம் செய்திருந்தால் அதை அகற்றிவிடும்படி அந்த அமைப்புகள் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறின.
நிதித்துறை இயக்குநர் மீது
சீலாட் அறநிறுவனம் புகார்
சிங்கப்பூர் சீலாட் அறநிறுவனம், தனது நிதித்துறை இயக்குநருக்கு எதிராக காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கிறது.
பயிற்றுவிப்பாளர்கள் சிலர் சரிவர சம்பளம் பெறவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து நிறுவனம் அந்த நடவடிக்கையை எடுத்தது. அந்த இயக்குநர் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அறநிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தனது நிதி நடைமுறைகளில் ஒழுங்கீனங்கள் இடம்பெற்று இருப்பதாக தன்னை நிர்வகிக்கும் ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட் எஸ்ஜி) அமைப்பு தன்னிடம் தெரிவித்ததாக அறநிறுவனம் அறிக்கையில் கூறியது.
பரிசோதித்துப் பார்த்ததில் அதிக கவலை தரும் அம்சங்கள் தெரிய வந்ததாகவும் அது குறிப்பிட்டது. இந்த விவகாரம் தொடர்பிலான புலன்விசாரணையில் அதிகாரிகளுடன் தான் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் அறநிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, தான் தனது நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதாகவும் அது கூறியது.

