போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், நள்ளிரவு நேரத்தில் 21 வயது வாகன ஓட்டுநர் ஒருவரை கார்களில் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்த விரட்டல் சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கிராஞ்சியில் இருந்து சுவா சூ காங் வரை நிகழ்ந்தது.
போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர், கிராஞ்சி ரோட்டை நோக்கி கிராஞ்சி லூப்பில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணி இருக்கும்.
அந்த நேரத்தில் அந்த வழியில் வந்த வேன் ஒன்றைச் சோதனையிட வேண்டும் என்று சொல்லி அதை நிறுத்தும்படி அதை ஓட்டிவந்தவருக்கு அந்த அதிகாரி உத்தரவிட்டார்.
ஆனால் வேன் வாகனத்தை ஓட்டி வந்தவர் அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தன் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார்.
கடைசியாக அந்த 21 வயது ஓட்டுநர், சுவா சூ காங்கில் தடுத்து நிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியது, இதர போக்குவரத்துக் குற்றங்களைச் செய்தது ஆகியவற்றுக்காக அந்த ஆடவர் கைதானதாக காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் புலன்விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை கூறியது.

