துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவைப்படும் உணவு, தண்ணீர் போன்றவற்றை வாங்கி விநியோகிக்க ஏதுவாக சிங்கப்பூர் இதுவரை ஏறக்குறைய $9 மில்லியன் திரட்டி இருக்கிறது.
தேவைப்படும் எரிபொருள், தார்பாய்க் கொட்டகை போன்ற பல பொருள்களையும் சிங்கப்பூர் கொடையாக அளித்துள்ளது.
துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ சிங்கப்பூரில் தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் அள்ளிக்கொடுத்து வருகின்றன.
அவற்றில் குளிர் காலத்திற்குச் சரிவராத போர்வைகள், தூங்குவதற்குப் பயன்படும் உறைகள், துணிக் கொட்டகைகள் முதலான பலவும் உள்ள டங்கும் என்று இங்கு செயல்படும் உதவி அமைப்புகள் தெரிவித்தன.
சிங்கப்பூரர்களின் தாராள உதவிகளால் அந்த அமைப்புகள் மிகவும் மனம் நெகிழ்ந்து உள்ளது. அதே வேளையில் வழங்கப்படும் பொருள்கள், தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்பதை அவை சுட்டிக்காட்டின.
இல்லை எனில் தேவைஇல்லாத பொருள்கள் அதிகம் சேர்ந்து அதனால் தேவைப்படும் பொருள்களை அனுப்புவதற்கு இடையூறு ஏற்படலாம் என்று அவை குறிப்பிட்டன.
துருக்கி, சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் நிகழ்ந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான முறை நிலம் அதிர்ந்தது.
பிப்ரவரி 20ஆம் தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 100,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்துவிட்டன. 50,000 மக்கள் கொல்லப்பட்டளர். மில்லியன் கணக்கான மக்கள் வீடின்றித் தவிக்கிறார்கள்.
துருக்கி, சிரியா மக்களுக்கு கொடை வழங்க விரும்புவோர் Giving.sg என்ற தேசிய இணையத்தளத்தை நாடலாம்.
இந்தத் தளம் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சின் ஆதரவைப் பெற்றது.