சிங்கப்பூர் உணவு அமைப்பு, சீனாவில் தயாரிக்கப்படும் சாங் லிங் நிலக்கடலையை மீட்டுக் கொண்டுள்ளது.
அந்தக் கடலையில் 'சைக்ளமெட்' என்ற வேதி அமிலம் கலந்து இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவை மீட்டுக்கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூரில் உணவு தயாரிப்புப் பொருள்களில் செயற்கை இனிப்பாக சைக்ளமெட் அமிலத்தைச் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிலக்கடலையில் அதைச் சேர்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
சாங் லிங் தயாரிப்பு நிலக்கடலையில் உடலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய அளவுக்கு சைக்ளமெட் அமிலம் இல்லை என்றாலும் அந்த அமிலத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது நல்லதல்ல என்று உணவு அமைப்பு ஆலோசனை கூறி உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தக் கடலையை மீட்டுக்கொள்ளும்படி அதை இறக்குமதி செய்யும் 'யான் தாய் யிட்' என்ற இறக்குமதி நிறுவனத்திற்கு உணவு அமைப்பு உத்தரவிட்டு உள்ளது.
சாங் லிங் கடலையைச் சாப்பிட்டு இருப்போர் யாராவது தங்கள் உடலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்தால் அவர்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

