பத்தே நிமிடங்களில் முடிவுகளை வழங்கும் போதைப்பொருளுக்கான புதிய உமிழ்நீர் பரிசோதனைக் கருவிகள் சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை சாலைத் தடுப்புகளிலும் பயன்படுத்தப்படும்.
உள்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், ஜனவரியிலிருந்து அக்கருவிகள் சோதனைச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
உலகளவில் போதைப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிங்கப்பூரை போதைப்புழக்கம் இன்றி வைத்திருப்பதில் இது சவாலாக விளங்குவதாக அவர் சொன்னார்.
"இந்தக் கருவிகள் இலகுவாகவும் கச்சிதமாகவும் உள்ளன. சோதனைச்சாவடிகளில் போதைப் புழங்கிகளைக் கண்டறிய ஆக்கபூர்வமான வழியாக இவை உள்ளன," என்றார் அவர்.
காவல்துறையினரும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் நடத்தும் சாலைத் தடுப்பு கூட்டு நடவடிக்கைகளின்போது இந்தப் பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படும் என்று பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.
களத்தில் பயன்படுத்தப்படக்கூடிய இந்த முதற்கட்ட பரிசோதனைக் கருவியால் குறுகிய நேரத்தில் முடிவுகளை வழங்க முடிவதால், பிடிபட்டவர்களிடம் போதைப்புழக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்ய இது உதவியாக இருக்கும் என்று உள்துறை அமைச்சு கூறியது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் போதைப்புழக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் அதேவேளையில், இளையர்களிடையே போதைப்புழக்கம் இருப்பது குறித்து உள்துறை அமைச்சு கவலை கொண்டிருந்தப்பதாக பேராசிரியர் ஃபைஷால் சொன்னார்.
போதைப்பொருள் தீங்கு விளைவிப்பவை என்பதை ஏற்றுக்கொள்ளும் இளையர்கள் பெரும்பாலானோர், போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டு வருவதை ஆதரிக்கின்றனர். ஆனாலும், இளம் சிங்கப்பூரர்கள் சிலர், குறிப்பாக கஞ்சா உட்கொள்வதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்போக்குடன் இருப்பதாக பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
போதைப்புழங்கிகள் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியத்தைக் குறைக்க சிறைக் கைதிகள், முன்னாள் குற்றவாளிகள், அவர்தம் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கப்படும் என்றும் துணை அமைச்சர் சொன்னார்.

