குறைந்த திறன் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் கட்டுப்பாடு விதிப்பது
குறைந்த திறன்பெற்ற வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதால் கூடுதலான உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் முற்படக்கூடும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
ஏனெனில், குறைந்த திறன்பெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பதிலாக உள்ளூர்வாசிகளை வேலையில் சேர்த்து உற்பத்தி செயல்முறையை நிறுவனங்களால் மேம்படுத்த முடிந்ததாக அவர் சொன்னார்.
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நேற்று பதிலளித்தபோது டாக்டர் டான் இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு ஊழியரணி தொடர்பான கொள்கைகள் குறித்து அப்போதைக்கு அப்போது நடத்தப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் அமைகின்றன.
"உயர்தர வெளிநாட்டு நிபுணர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கும் அதேவேளையில் வரம்புகள், தீர்வை விதிப்பதன் மூலம் வேலை அனுமதி அட்டைதாரர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதில் எங்கள் நிலைப்பாட்டைக் கட்டிக்காக்கும் அணுகுமுறையைக் கையாள இது உதவுகிறது," என்று டாக்டர் டான் விவரித்தார்.
"உள்ளூர் ஊழியரணிக்குத் துணைநிற்கும் வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் பெற எங்கள் கொள்கைகள் உதவுவது முக்கியம். அப்போதுதான் நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு உள்ளூர்வாசிகளுக்குக் கூடுதலான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முடியும்," என்றும் அவர் சொன்னார்.
எனினும், கொள்கைகளை வகுக்கும் மொத்த நடைமுறைக்கு இந்த ஆய்வுகள் ஒரு விதத்தில் மட்டுமே பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கு வரம்புகள் உள்ளன என்பதை அறிவது முக்கியம்.
"எடுத்துக்காட்டாக, ஊழியர் அணியில் வெளிநாட்டினர் இடம்பெறுவதால் அவ்வளவாக அளவிட முடியாத அம்சங்களை இந்த ஆய்வுகளால் கருத்தில்கொள்ள இயலாது.
"எனவேதான், அண்மைய தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்கள், தொழில்துறையிடமிருந்து பெறப்படும் கருத்துகள் உள்ளிட்ட மற்ற தகவல்களுடன் சேர்த்து இவை கவனமாக ஆராயப்பட வேண்டும்," என்றார் டாக்டர் டான்.

