மாணவர்கள் மின்னிலக்க, இணையப் பாதுகாப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் திட்டம், வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டு கூடுதலான மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் நான்காவதும் ஆகப் புதிய பிரிவுமான மின்னிலக்க, உளவுச் சேவை நடத்தும் 'சென்டினல்' திட்டம், உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்குப் பயிலரங்குகளையும் போட்டிகளையும் நடத்துவதாக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
இணையப் பாதுகாப்பைப் பொறுத்தமட்டில், வட்டார அளவில் கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் கூறினார்.
எடுத்துக்காட்டாக, ஏடிஎம்எம் இணையப் பாதுகாப்பு, உன்னத தகவல் மையத்திற்காக சாங்கி கடற்படைத் தளத்தில் இடவசதி ஏற்படுத்தித் தரும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மூன்றாம் காலாண்டிற்குள் இது தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021ல் 15வது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ஏடிஎம்எம்) இந்த நிலையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
தற்காப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய திரு ஸாக்கியும் திரு ஹெங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
"அடிப்படை நிரலிடுதல் போன்ற அடிப்படைத் திறன்களை மாணவர்கள் பெறும் நோக்கில் 'சென்டினல்' திட்டம் கவனமாக வரையப்பட்டது.
"முன்னோடித் திட்டத்தில் மாணவர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். வரும் ஆண்டுகளில் அனைத்து உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு இத்திட்டத்தை வழங்க சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு போன்ற இதர அமைப்புகளுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று திரு ஸாக்கி கூறினார்.
நான்கு உயர்நிலைப்பள்ளிகள், 13 தொடக்கக் கல்லூரிகள், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு இத்திட்டத்தில் பங்கெடுத்ததாக தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மின்னிலக்க நிலையில் தற்காப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, 2019ல் முழுமைத் தற்காப்பின் ஆறாவது தூணாக மின்னிலக்கத் தற்காப்பு சேர்க்கப்பட்டதாக அமைச்சு சொன்னது.
மின்னிலக்கத் தற்காப்பின் முக்கியத்துவம் குறித்து இளம் வயதிலிருந்தே சிங்கப்பூரர்களை ஈடுபடுத்துவதற்கான அவசியத்தை தானும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் அறிந்து வைத்திருப்பதாக அமைச்சு விவரித்தது.
அந்த வகையில், சிங்கப்பூரின் மின்னிலக்கத் தற்காப்புக்குப் பங்களிக்கக்கூடிய பயன்தரும் இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கத் திறன்களை இளையர்கள் பெறும் வகையில் 'சென்டினல்' திட்டம் வரைப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.