வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த உதவும் சிங்கப்பூர் உலகளாவிய கட்டமைப்பு நிதித் திட்டம், 2020 ஆகஸ்ட்டுக்கும் 2022 டிசம்பருக்கும் இடையே ஏறக்குறைய $570,000 தொகையை வழங்கியதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் கிட்டத்தட்ட 300 நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்தது. கருத்தரங்குகள், விழாக்கால கொண்டாட்டங்கள், மின்னிலக்க உள்ளடக்க உருவாக்கம் தொடர்பான பங்காளித்துவங்கள் உள்ளிட்டவை அந்நிகழ்ச்சிகளில் அடங்கும்.
இத்திட்டத்துக்கான மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக திருவாட்டி லோ கூறினார்.
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் எழுப்பிய கேள்விக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்த அவர், வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் உடனான உறவையும் தொடர்பையும் வலுப்படுத்த இத்தகைய முயற்சிகள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் அதிகமானோர் வசிக்கும் ஆஸ்திரேலியா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறத்தாழ 25,000 பேரை இத்திட்டம் சென்றடைந்துள்ளது.
சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் தொடர்புகளை வலுப்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் சமூகத்தினருக்காக 2019 ஜூன் மாதம் சிங்கப்பூர் உலகளாவிய கட்டமைப்பு அமைக்கப்பட்டது.
இந்தக் கட்டமைப்பு அதன் இலக்குகளை எட்ட உதவ, 2020 ஆகஸ்ட்டில் சிங்கப்பூர் உலகளாவிய கட்டமைப்பு நிதித் திட்டம் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரர்களிடையேயும் சிங்கப்பூரின் நண்பர்களிடையேயும் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதே இந்தக் கட்டமைப்பின் நோக்கம் என்றார் திருவாட்டி லோ.
"குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றின்போது அவர்கள் தொடர்ந்து சிங்கப்பூருடன் தொடர்பில் இருப்பதை உறுதிசெய்வது முக்கியமாக இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
பெருந்தொற்று சூழலிலும் இந்தக் கட்டமைப்பில் தற்போது 100,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக திருவாட்டி லோ தெரிவித்தார்.

