காவல்துறை அதிகாரியை இழுத்துச் சென்ற விலையுயர்ந்த மசராட்டி காரை அரசாங்கம் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரின் மதிப்பு தெரியவில்லை.
லீ செங் யான், 39, தகுதி யிழந்த பிறகும் மீண்டும் காரை ஓட்டியது உட்பட பல்வேறு குற்றச் செயல்களுக்காக ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்.
சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் தகுதியிழந்த ஒருவர், மீண்டும் மீண்டும் வாகனத்தை ஓட்டி, அரசுத் தரப்பு கேட்டுக் கொண்டால் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
தற்போது சிறையில் உள்ள லீ, ஏற்கெனவே இரண்டு வழக்கு விசாரணைகளில் தண்டிக்கப்பட்டவர்.
போக்குவரத்து காவல் அதிகாரிக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக லீக்கு 2020 ஜூலையில் நான்கு ஆண்டு, ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் முழுக்க வாகனம் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2017 நவம்பர் 17ஆம் தேதி வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டும் லீ காரை ஓட்டியிக்கிறார். அப்போது இருக்கை வார் அணியாததற்காக பிடோக் ரெசர்வோர் ரோட்டில் அதிகாரி ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.
ஓட்டுநரின் கதவு அருகே அதிகாரி நின்றுகொண்டிருந்தபோது லீ, திடீரென காரை பின்னால் நகர்த்தி பிறகு முன்னோக்கிச் சென்றார். அப்போது காவல் அதிகாரியின் சீருடை முன்கதவில் சிக்கிக்கொண்டதால் பிடோக் ரெசர்வோர் ரோட்டில் சுமார் 100 மீட்டர் தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டார். அதிகாரி கீழே விழுந்தும் உதவி செய்யாமல் அவர் வேகமாகச் சென்று விட்டார்.
இந்த வழக்கில் லீ மேல்முறையீடு செய்ததால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அப்போதும் நண்பரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட பிஎம் டபிள்யூ காரை அவர் மறுபடியும் ஓட்டினார்.
இதனால் அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. 2021 மார்ச் 12ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் அவர் சாலைத் தடுப்புகளையும் மீறி காரை ஓட்டினார். சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச்சென்ற அவர் இரண்டு சிவப்பு விளக்கு சமிக்கஞைகளிலும் காரை நிறுத்தவில்லை.
2022 ஜனவரியில் அவருக்கு கூடுதலாக ஓராண்டு, ஒன்பது மாதங்கள், 16 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2023 ஜனவரி 18ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், தனக்கு விதிக்கப்பட்ட ஆறு வருடங் களுக்கும் அதிகமான சிறைத் தண்டனையை கருணை காட்டி குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தனது செயலுக்காக பலமுறை வருந்தியதாகவும் மீண்டும் இரண்டு மகள்களுடன் சேர்ந்திருக்க மன்னிப்பு வழங்குமாறும் லீ வேண்டினார்.
மசராட்டிக் காரை பறிமுதல் செய்யக்கூடாது என்று வலியுறுத்திய அவர், அந்த காரை விற்றுதான் ஜப்பானில் உள்ள இரண்டு மகள்களுக்கு உதவ முடியும் என்றார்.
ஆனால் நீதிபதி அய்டிட் அப்துல்லா அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். அதோடு பாடம் கற்றுக்கொள்ளாத லீயை அவர் சாடினார்.
"நீங்கள் செய்த செயல்களின் கடுமையைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை," என்று நீதிபதி குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரியில் லீயின் சகோதரி, தனது சட்டச் செலவு களுக்காக பெற்றோரிடம் லீ கடன் வாங்கியிருந்ததாகவும் அவரது இரண்டு மகள்களை பார்த்துக் கொள்ளவும் மசராட்டி காரை பெற்றோரிடம் அவர் அடகு வைத்திருந்ததாகவும் அதனால் காரை பறிமுதல் செய்யக் கூடாது என்றும் மாவட்ட நீதிபதி கமலா பொன்னம்பலத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் நேற்று நடைபெற்ற விசாரணையில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் டிமோதியஸ் கோ, குற்றச்செயல் புரிந்தபோது லீ காருக்குச் சொந்தக்காரராக இருந்ததால் அதனை பறிமுதல் செய்யாமல் மற்றொருவருக்கு காரின் உரிமையை மாற்ற அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

