கஸ்கேடன் சாலையில் நடந்த சண்டையின் தொடர்பில் 20 வயது நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கஸ்கேடன் சாலையில் சனிக்கிழமை விடியற்காலை 2.50 மணியளவில் சண்டை நடப்பதாக தகவல் வந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு காவல்துறையினர் பதிலளித்துள்ளனர்.
மிங் ஆர்கேட் கடைத்தொகுதிக்கு வெளியே 'ஹார்ட் ராக் கேஃபே' கடைக்கு வெளியே நடந்த அந்த சண்டையைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
கறுப்பு 'டீ' சட்டை அணிந்த ஓர் இளையரை ஒரு குழுவினர் எட்டி உதைத்துத் தாக்குவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
இளையர் தாக்குதலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஆனால் கால் தடுமாறி சாலையில் விழுகிறார். அப்படியும் அவரை நான்கு பேர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்குகின்றனர். அப்போது சிலர் குறுக்கே புகுந்ததால் சண்டையை குழுவினர் நிறுத்துகின்றனர். ஒரு பெண்ணும் தள்ளப்பட்டு கீழே விழுகிறார்.
ஏறக்குறைய 54 வினாடிகள் ஓடும் காணொளியின் இறுதியில், இளையரின் தலை மீது ஒருவர் தாக்குவதை மற்றொருவர் தடுத்து நிறுத்துகிறார்.
சண்டைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இளையரை அவ்வழியாக வரும் சிலர் விசாரிப்பதைக் காண முடிகிறது.
இருபது வயது நபர் விசாரணையில் உதவி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

