கைத்தொலைபேசிக்கான ஆறாம் தலைமுறை தொலைத்தொடர்புத் திட்டம், வீடுகளுக்கு நொடிக்கு 10 கிகாபைட் விரிவலை இணைப்புத் திட்டம் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூர் திட்டமிட்டு வருகிறது.
அதுகுறித்த தேசிய அளவிலான திட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வடிவமைக்கவும் மின்னிலக்க ஆதிக்கத்துக்கான உலகளாவிய பந்தயத்தில் விரைந்து முன்னேறவும் சிங்கப்பூருக்கு இது உதவும்.
மின்னிலக்கத் தொடர்புத் திட்டவரைவு என்பது இதன் பெயர். சிங்கப்பூரில் கூடுதலான கடலடிக் கம்பிவடங்களைப் பொருத்துவது தொடர்பான திட்டங்களும் இதில் சேர்க்கப்படும்.
மின்னிலக்க வர்த்தகத்தை மேம்படுத்துவதும் சிங்கப்பூர்வழியாக மேற்கொள்ளப்படும் தரவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் இதன் இலக்குகள்.
நாட்டிற்குக் கூடுதலான முதலீடுகளை ஈர்க்க இவை உதவும்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்குமான பொருளியல் வாய்ப்புகளை உருவாக்க இது கைகொடுக்கும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் குறித்த திட்டமிடலை வடிவமைப்பதற்கு ஈடானது இது என்றார் அவர்.
நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040, அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் போக்குவரத்து இலக்குகளை வரையறுப்பதற்குச் சமம் என்றும் கூறலாம் என்றார் அமைச்சர் டியோ.
இதேபோன்ற தொலை நோக்கு சில நாடுகளுக்கு உண்டு.
இருப்பினும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவை திட்டமிடுவது குறைவே என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தொடர்பு, தகவல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூரின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பு மேம்பாடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தேசிய அளவிலான திட்டவரைவைத் தயாரிக்க ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதில் வர்த்தகம், தொழில்துறை சார்ந்த எட்டு வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திட்டம் இவ்வாண்டின் பிற்பாதியில் தொடங்கப்படும்.
தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியும் 'வெஸ்டர்ன் டிஜிட்டல்' நிறுவனத்தின் அனைத்துலகப் பிரிவுத் துணைத்தலைவர் இர்வின் டானும் இந்தக் குழுவிற்குக் கூட்டாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
சிங்கப்பூர் வீடுகளுக்குத் தற்போது நொடிக்கு 1 கிகாபைட் வேகம் கொண்ட இணையத் தொடர்பு வழங்கப்படுகிறது.
கூடுதலான உள்ளூர் நிறுவனங்கள் தொலைத்தொடர்புச் சேவை வழங்குவதால், இங்குள்ள அதிக எண்ணிக்கையிலான வீடுகள் அதிவேக இணையத் தொடர்பு பெற்றிருப்பது சாத்தியமாகியுள்ளது.
'5ஜி' எனப்படும் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்புச் சேவையை அறிமுகப்படுத்திய சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
'4ஜி' எனப்படும் நான்காம் தலைமுறை தொலைத்தொடர்புச் சேவையைவிட '5ஜி' இணைப்பு 10 மடங்கு வேகமானது.
கூடுதலாக ஏறக்குறைய 1,000 கருவிகளை எந்த இடையூறும் இன்றி இதன்மூலம் இணைக்க முடியும். ஒப்புநோக்க, '6ஜி' எனப்படும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புச் சேவை '5ஜி' இணைப்பைவிட 100 மடங்கு வேகமானதாய் இருக்கும்.
அறிவார்ந்த தேசம், மின்னிலக்கத்துக்கான அரசாங்க அலுவலகமும் தேசிய ஆய்வு அற நிறுவனமும் அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான மேல்விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

