துல்லியப் பொறியியல் துறை ஊழியர்களுக்கான முன்னோடித் திட்டம் அறிமுகம் காணவிருக்கிறது.
இதன்கீழ், பயிற்சி, வேலைதேடல் ஆகியவை தொடர்பில் ஊழியர்கள் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியிடமிருந்து உதவி பெறுவர்.
துறைசார்ந்த நிறுவனங்களில் மனிதவளம், தேவைப்படும் திறன்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளை இந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொறியியல் பள்ளி மேற்கொள்ளும்.
அதன் அடிப்படையில் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சித் திட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும்.
கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோவ் ஹுவாங் நேற்று நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டார். நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, வேலை-திறன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் என்றார் அவர்.
சென்ற மாத மத்தியில் வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டுப் பேசுகையில் துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் வேலை-திறன் ஒருங்கிணைப்புத் திட்டம் குறித்துக் குறிப்பிட்டார். அதுகுறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் துணை அமைச்சர் கான் பதிலளித்தார்.
துல்லியப் பொறியியல் துறையில் அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அதிகமான மூத்த ஊழியர்கள் உள்ளனர். இதில் நிறைய வேலைகள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் துறை சார்ந்த அளவில், ஊழியர்களின் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பில் நிறைய செய்யவேண்டி இருப்பதாகத் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய முன்னோடித் திட்டம், நிறுவனங்களுக்கு திறன்மிக்க ஊழியர்கள் கிடைக்க உதவும்.
கூடுதலான ஊழியர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் வேலையில் முன்னேற்றம் அடையவும் இது உதவும் என்று நம்பப்படுவதாகத் திருவாட்டி கான் கூறினார்.
முன்னோடித் திட்டத்தில் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை ஆகிய துறைகளும் இணைத்துக்கொள்ளப்படும் என்றார் அவர்.

