ஆங்கிலோ-சீனத் தொடக்கப் பள்ளியை 2030ஆம் ஆண்டு தெங்கா வட்டாரத்திற்கு மாற்றும் திட்டம் குறித்துப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தபோது அதனை இருபாலரும் பயிலும் பள்ளியாக அமைத்தால் மட்டுமே இடமாற்றம் சாத்தியம் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
அவ்வாறு செய்தால்தான், தெங்கா வட்டாரப் பிள்ளைகளின் தொடக்கப் பள்ளிச் சேர்க்கை வாய்ப்புகள் பாதிக்கப்படமாட்டா.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆங்கிலோ-சீனத் தொடக்கப் பள்ளி தொடர்ந்து ஆண் மாணாக்கர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டால், தெங்கா வட்டாரத்தில் உள்ள மற்ற தொடக்கப் பள்ளிகளை அது பாதிக்கும்.
அவற்றில் மாணவர், மாணவியர் எண்ணிக்கையில் சமநிலை பாதிக்கப்படும். இதுகுறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் கல்வி அமைச்சு எடுத்துக்கூறியது. இருபாலர் பள்ளியாக மாற்றும்படி ஆலோசனை கூறியது. அதனை ஏற்று, ஆங்கிலோ-சீனப் பள்ளி நிர்வாகம் இடம் மாறத் திட்டமிட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் சான் கூறினார்.
பள்ளிகளின் இடமாற்றம் குறித்து அமைச்சு எவ்வாறு முடிவுசெய்கிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஒருபாலர் பயிலும் பள்ளிகளில் இருபாலரையும் சேர்க்கும் வகையில் மாற்றம் செய்ய கல்வி அமைச்சு திட்டமிடுகிறதா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சான், முன்னர் அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு என்றபோதும் தற்போது அவ்வாறு திட்டம் ஏதும் இல்லை என்றார்.
அந்தந்தப் பள்ளி நிர்வாகத்துடன் கலந்துபேசி அதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்குமான மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆதரவை அமைச்சு வழங்குகிறது என்றார் திரு சான்.
இடமாற்றம் அல்லது இருபாலருக்குமான பள்ளியாக மாறுதல் உள்ளிட்ட பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழும்போது, அமைச்சு கூடுமானவரை முன்கூட்டியே தகவல் வெளியிடும்.
பள்ளியின் தற்போதைய மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அதிகம் பாதிப்பு ஏற்படா வண்ணம், இத்தகைய ஏற்பாடுகளில் அமைச்சு பள்ளிக்கு உதவும் என்று அவர் சொன்னார்.
வின்ஸ்டெட் ரோட்டில் உள்ள ஆங்கிலோ-சீனப் பள்ளி வளாகம் காலியாகும்போது அந்த இடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

