செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1a21bb12-8898-44e3-bf93-4c01fb1cb8e3
-

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் இவ்வாண்டு கூடுதல் 'பிடிஓ' வீடுகள்

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் 'பிடிஓ' எனப்படும் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளை வாங்கத் திட்டமிடுவோருக்கு இந்த ஆண்டு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். வீடமைப்பு வளர்ச்சி கழகம் கூடுதல் எண்ணிக்கையில் இவ்வீடுகளை விற்பனைக்கு விடவிருப்பது இதற்குக் காரணம்.

முதன்முறை வீடு வாங்குவோருக்கு உதவும் நோக்கில், சிறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட 40 அல்லது அதற்குக் குறைந்த வயதுடைய தம்பதியர் ஆகியோருக்கு 'பிடிஓ' வீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த நடைமுறை வரும் ஆகஸ்டு மாதத்திலிருந்து நடப்புக்கு வரும். தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டுக்கான முதல் 'பிடிஓ' விற்பனையில் ஏறக்குறைய 4,500 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். காலாங், வாம்போ, குவீன்ஸ்டவுன் போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டைகளிலும் ஜூரோங் வெஸ்ட், தெங்கா போன்ற முதிர்ச்சியடையாத பேட்டைகளிலும் இவை அமைந்திருக்கும். இந்த ஆண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மொத்தம் 23,000 'பிடிஓ' வீடுகளை விற்பனைக்கு விடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சச்சரவு தொடர்பில் சமரசப் பேச்சாளர் முன்னிலையிலான அமர்வு கட்டாயம்

அண்டை வீட்டு இரைச்சல் தொடர்பான சச்சரவுகளுக்கு இனி சமரச நிலையம் சென்று பேச்சு நடத்துவது கட்டாயமாக்கப்படும். இதனை மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடும்.

சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சச்சரவுகள் தொடர்ந்தாலோ, சச்சரவில் ஈடுபடுவோர் 'சிடிஆர்டி' எனப்படும் சமூக சச்சரவுகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்குப் பதிய விரும்பினாலோ அதற்குமுன் சமரச நிலைய அமர்வில் கலந்துகொண்டு பேச்சுநடத்துவதும் இனி கட்டாயம்.

சட்ட அமைச்சுக்கான நிதி ஓதுக்கீட்டு விவாதத்தின்போது சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் தோங் நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக அண்டை வீட்டாருக்கிடையே சச்சரவுகள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், பிரச்சினைகளின் தொடக்கக் கட்டத்திலேயே, அமைதியான முறையில் தீர்வுகாண்பதை ஊக்குவிக்கும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று.

"சமரசப் பேச்சால் அண்டை வீட்டாருக்கு இடையிலான உறவைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் முடியும். இருதரப்புக்கும் சாதகமான முறையில் சிக்கலுக்குத் தீர்வுகாண, பயிற்சிபெற்ற சமரசப் பேச்சாளர் முன்னிலையில் அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ள உதவுவது நோக்கம்," என்று அவர் கூறினார்.